என்எல்சி இந்தியா நிறுவன பணியாளர்களுக்கான தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் புறக்கணிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக நெய்வேலியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறும்போது, “என்எல்சி இந்தியா நிறுவனத்தில் அண்மையில் காலி பணியிடங்களுக்காக நடைபெற்ற தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரச்சினையை கிளப்பும். என்எல்சி நிர்வாகம் இதற்கான விளக்கத்தை உடனடியாக அளிக்க வேண்டும். அதுவரையில் இந்த நேர்காணலை நிறுத்தி வைக்க வேண்டும்” என்றார்.
நெய்வேலியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், “என்எல்சி நிறுவனத்தில் 259 பொறியாளர் பணியிடங்களுக்கான தேர்வில் தமிழக இளையோர் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக முதல்வர், தேர்வை உடனடியாக தடுத்து நிறுத்தி, இதற்கான அறிவிப்பை சட்டமன்றத்தில் வெளியிட வேண்டும். இல்லையெனில் வரும் 16-ம் தேதி என்எல்சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தப்படும்” என்றார்.
தமிழ்த் தேசியப் பேரியக்கம் பொது செயலாளர் கி.வெங்கட்ராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என்எல்சியில் 259 காலியிடங்களுக்கான எழுத்துத் தேர்வில் தேர்வாகியிருப்பதாக 1,582 பெயர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது. இதல், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஒரு விழுக்காடு கூட இல்லை. தொடர்ந்து நடக்க இருக்கும் நேர்முகத் தேர்வில்தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரையாவது பணிக்குத் தேர்வு செய்வார்களா என்பது கூட ஐயமாக உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago