திமுக ஆட்சி அமைந்தவுடன், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டுள்ள கோரிக்கை மனுக்கள் மீது 100 நாட்களில் தீர்வு காணப்படவில்லை எனில் உரிமையுடன் என்னை கேட்கலாம் என்று கிருஷ்ணகிரியில் நடந்த நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி அடுத்த குப்பம் சாலையில் பூசாரிப்பட்டி கூட்டு ரோட்டில் நேற்று திமுக சார்பில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி நடந்தது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்ற பின்னர் பேசியதாவது:
திமுக ஆட்சி அமைந்தவுடன், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டுள்ள கோரிக்கை மனுக்கள் மீது 100 நாட்களில் தீர்வு காணப்படும். தீர்வு காணப்படவில்லை எனில் உரிமையுடன் என்னை கேட்கலாம். 1990-ம் ஆண்டு திமுக ஆட்சியில் 13,500 மக்கள் நலப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். தொடர்ந்து வந்த அதிமுக ஆட்சியில் மக்கள் நலப் பணியாளர்கள் திட்டம் ரத்து செய்து, பணி நீக்கம் செய்யப்பட்டனர். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்படும்.
பராமரிக்கப்படாத கூட்டுக்குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, தண்ணீர் பிரச்சினை தீர்க்கப்படும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைச்சர் இல்லை. இருப்பினும், கே.பி.முனுசாமி அமைச்சரைப் போல் செயல்பட்டு வருகிறார். 2014-ம் ஆண்டு நடந்த அதிமுக பொதுக்குழுவின்போது 30 சதவீதம் முனுசாமி என கட்சியினர் கூறியதையடுத்து, அடுத்த நாளே கே.பி.முனுசாமியின் அமைச்சர் பதவி உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகள் பறிக்கப்பட்டன. ஜெயலலிதா உயிரோடு இருந்த வரையில் அவருக்கு பதவிகள் கொடுக்கவில்லை. அதிமுகவை உடைக்க கே.பி.முனுசாமி தான் காரணமாக இருக்கப் போகிறார் என தகவல்கள் வருகிறது.
மிசா தழும்புகள்
பிப்ரவரி 1-ம் தேதி எனதுவாழ்க்கையில் மறக்க முடியாத நாள். அவசரகால பிரகடனத்தின்போது நான் கைது செய்யப்பட்டேன். ஒரு ஆண்டு காலம் சிறை தண்டனை அனுபவித்தேன். அவசர நிலை பிரகடனத்தை திமுகஎதிர்த்ததால், ஆட்சி கவிழ்க்கப்பட்டது. சிறையில் பல கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டோம். அப்போது சகோதரராக இருந்து என்னை காத்தவர் சிட்டிபாபு. அவர் பல காயங்களை உள்வாங்கி, கடைசியில் மருத்துவமனையில் உயிரிழந்தார். மிசா கால தழும்புகள் இன்றும் உள்ளன.கரோனா காலத்தில் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. அதனை பயன்படுத்தி அரசு ஊழல் செய்துள்ளது. பரிசோதனை கிட்,கிருமிநாசினி, முகக்கவசம் வாங்கியதில் எல்லாம் ஊழல் நடந்தது. கரோனா காலத்திலும் ஊழல் செய்யும் ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது. திமுக உங்களுக்காக உழைக்கும் கட்சி.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
நிகழ்ச்சியில் எம்எல்ஏக்களான கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் செங்குட்டுவன், மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ், வேப்பனப்பள்ளி முருகன்,ஓசூர் சத்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago