திருச்சி ரங்கம் ரங்கநாதர் கோயிலில் நேற்று நடைபெற்ற தைத் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேர் வடம் பிடித்தனர்.
பூலோக வைகுண்டம் என்ற பெருமையை உடைய ரங்கம் ரங்கநாதர் கோயிலில் தைத் தேரோட்ட விழா ஜன.19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 4-ம் திருநாளான ஜன.22-ம் தேதி நம்பெருமாள் தங்கக் கருட வாகனத்தில் உத்திர வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். 8-ம் திருநாளான நேற்று முன்தினம் மாலை தங்கக் குதிரை வாகனத்தில் புறப்பட்டு, உத்திர வீதிகளில் வலம் வந்து வையாளி கண்டருளினார்.
விழாவின் முக்கிய நிகழ்வான தைத் தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி, நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் அதிகாலை 3.45 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு, அதிகாலை 4.30 மணிக்கு தைத் தேர் மண்டபத்துக்கு எழுந்தருளினார்.
அங்கு சிறப்பு பூஜை நடைபெற்ற பின்னர், அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளினார். காலை 6 மணிக்கு பக்தர்கள் ரங்கா, ரங்கா என பக்திப் பரவசத்துடன் தேர் வடம் பிடித்தனர். கோயிலின் 4 உத்திர வீதிகள் வழியாகச் சென்ற தேர், காலை 10 மணிக்கு நிலையை அடைந்தது.ஏராளமான பக்தர்கள் நம்பெருமாளை வழிபட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago