ஓசூரில் தனியார் நிதி நிறுவனத்தில் பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் ரூ.10 கோடி மதிப்புள்ள 25 கிலோ தங்க நகைகள் கொள்ளை கொள்ளையர்களைப் பிடிக்க 10 போலீஸ் தனிப்படைகள் அமைப்பு

By செய்திப்பிரிவு

ஓசூரில் தனியார் நிதி நிறுவனத்தில், ஊழியர்களைத் தாக்கி துப்பாக்கி முனையில் ரூ.10 கோடி மதிப்புள்ள 25 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம கும்பலைப் பிடிக்க போலீஸார் 10 தனிப்படைகளை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரில் பாகலூர் சாலையில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் கர்நாடகா மாநிலம் தும்கூரைச் சேர்ந்த சீனிவாச ராகவா(28) என்பவர் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை 9.30 மணியளவில் நிதி நிறுவன ஊழியர்கள், அலுவலகத்தைத் திறந்தனர். அப்போது வாடிக்கையாளர்கள்போல் உள்ளே சென்ற மர்ம நபர்கள் 6 பேர் துப்பாக்கிகள் மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைக் காட்டிமிரட்டினர். நிதி நிறுவன மேலாளர் சீனிவாச ராகவா, ஊழியர்கள் மாருதி (24), பிரசாத் (29) மற்றும் காவலாளி ராஜேந்திரன் (55) ஆகியோரை தாக்கி கை, கால்களை கட்டிப் போட்டனர். ஊழியர்களிடம் இருந்து சாவிகளை மிரட்டிப் பறித்த மர்ம நபர்கள், லாக்கரில் இருந்த 25 கிலோதங்க நகைகள், ரூ.90 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக தகவலறிந்த கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி பண்டி கங்காதர், ஓசூர் டிஎஸ்பி முரளி மற்றும் அட்கோ போலீஸார் நிகழ்விடத்துக்கு வந்தனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்ட எஸ்பி, ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார்.

கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கு பதிவான தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மோப்ப நாய் பைரவி வரவழைக்கப்பட்டது. சிறிது தூரம் ஓடிய பைரவி யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. திருட்டு போன நகைகளின் மதிப்பு ரூ.10 கோடி இருக்கலாம் என போலீஸார் தெரிவித் தனர்.

இதுபோன்ற கொள்ளைச் சம்பவங்கள் கர்நாடகா மாநிலத்தில் நடந்துள்ளதால், அம்மாநில கொள்ளையர்களுக்கு ஓசூர் கொள்ளைச் சம்பவத்திலும் தொடர்பு இருக்கலாம் என போலீஸார் சந்தேகம் அடைந்துள்ள னர். மேலும், நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தகவலறிந்த வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் முன்பு திரண்டனர்.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி பண்டி கங்காதர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலைப் பிடிக்க10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கர்நாடகா மாநிலத்துக்கு 3 தனிப்படைகள் விரைந்துள்ளன. கூடிய விரைவில் குற்றவாளிகளைக் கைது செய்து விடுவோம். வடமாநில கொள்ளைக் கும்பல் இச்சம்பவத்தில் ஈடுபட்டதா என்பது சரியாக தெரியவில்லை. ஆனால், கொள்ளைக் கும்பல் இந்தியில் பேசியதாக, அவர்களால் தாக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்’’ என்றார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்