மதுராந்தகம் ஏரியை தூர்வாரி சீரமைக்க ரூ.125 கோடி ஒதுக்கீடு நீர் மேலாண்மையில் தமிழகம் சிறந்து விளங்குகிறது தேர்தல் பிரச்சாரத்தின்போது முதல்வர் பழனிசாமி பெருமிதம்

By செய்திப்பிரிவு

தமிழகம் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்குவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் திருப்போரூர், புதுப்பட்டினம் பகுதியில் பிரச்சாரத்தின்போது பேசியதாவது: தமிழகம் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்குகிறது. இதற்கு பாலாற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளே சான்று. தடுப்பணைகள் மூலம் கரையோர கிராமங்களின் வசிக்கும் விவசாயிகள் மற்றும் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் பெரிதும் பயனடைந்துள்ளன. மேலும், குடிநீர் தட்டுப்பாடு முற்றிலும் இல்லை.

தேர்தலுக்காக பிரதமரை நான் சந்தித்து பேசியதாக ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழகத்தில் செயல்படுத்த வேண்டிய திட்டங்களுக்கான நிதியை கேட்டு பெறுவதற்காகவே பிரதமரை நேரில் சந்தித்தேன் என்றார்.

பிரச்சாரத்தை தொடங்குவதற்கு முன்னதாக கந்தசுவாமி கோயில் நிர்வாகம் சார்பில் முதல்வருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.

பின்னர் மதுராந்தகம், செய்யூர், தாம்பரம் பகுதிகளில் முதல்வர் பேசியது: மதுராந்தகம் ஏரி 2,600 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியை நம்பி 7,600 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த ஏரியை தூர்வாருவதற்கு ரூ.125 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம். விரைவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்படும்.

தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. கரோனா காலத்திலும் 60 ஆயிரம் கோடி முதலீட்டில் 74 தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ளன. பெண்களை தெய்வமாக போற்றி பாதுகாக்கும் தமிழகத்தில் பெண்ரளை கொச்சைப்படுத்தும் வகையில் திமுக தலைவரின் மகன் உதயநிதி ஸ்டாலின் கொச்சையாக பேசி வருகிறார்.

தற்போது சமூகத்தில் ஜாதி சண்டை கிடையாது மத சண்டை கிடையாது எந்த சண்டையும் இல்லாமல் பொதுமக்கள் நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

மதுராந்தகத்தில் கரும்பு, பருத்தி உற்பத்தி விவசாயிகள் மற்றும் பல்லாவரத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினரை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

’இந்து தமிழ்’ செய்தி எதிரொலி

கடந்த ஆண்டு செப்.11-ம் தேதி மதுராந்தகம் ஏரி தூர்வாரப்படும் என்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி அறிவித்தார். ஆனால், அது தொடர்பாக அரசாணை வெளியிடப்படாமலும், நிதி ஒதுக்கீடு செய்யாமலும் இருப்பது குறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழில் கடந்த ஜன.17-ம் தேதி செய்தி வெளியானது.

இதைத் தொடர்ந்து மதுராந்தகத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய முதல்வர் மதுராந்தகம் ஏரியை தூர்வார ரூ.125 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்