இலங்கை கடற்படையின் படகு மோதியதால் தமிழக மீனவர் படகு கவிழ்ந்து 4 பேர் மாயம் ஹெலிகாப்டர் மூலம் கடலில் தேடும் பணி தீவிரம்

By செய்திப்பிரிவு

இலங்கை கடற்படையின் படகுமோதியதால், தமிழக மீனவர்களின்படகு கடலில் கவிழ்ந்தது. இதனால் மாயமான 4 மீனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஆரோக்கிய சேசு என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், அதே பகுதியைச் சேர்ந்த ஏ.மெசியா(30), உச்சிப்புளியைச் சேர்ந்த வி.நாகராஜ்(52), எஸ்.செந்தில்குமார்(32), மண்டபம் அகதிகள் முகாமைச் சேர்ந்த என்.சாம்(28) ஆகியோர் ஜன.18-ம் தேதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

இவர்கள் நேற்று முன்தினம் அதிகாலை நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டு இருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாகக் கூறி அவர்களை ரோந்துப் படகில் வேகமாகச் சென்று பிடிக்கமுயன்றனர். அப்போது மீனவர்களின் விசைப்படகு மீது இலங்கை கடற்படையினரின் ரோந்து படகு பலமாக மோதியது. இதில் விசைப்படகு கடலில் மூழ்கியது. அதில் இருந்த 4 மீனவர்களும் கடலில் மூழ்கி மாயமானார்கள்.

தகவலறிந்த மீன்வளத் துறை அலுவலர்கள், ராமேசுவரம் மண்டபம் கடற்படைக்கு சொந்தமான ரோந்து படகு மூலமும், ஹெலிகாப்டர் மூலமும் மாயமான மீனவர்களை தேடி வருகின்றனர்.

இதுகுறித்து இலங்கை கடற்படை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘இலங்கை கடல் பகுதியில் எல்லை தாண்டி மீன்பிடித்த இந்திய படகை சிறை பிடிக்க முயன்றோம். அப்போது, அந்த விசைப்படகு கடற்படையின் ரோந்து படகை சேதப்படுத்திவிட்டுதப்பிச் சென்றபோது கடலில் மூழ்கிவிட்டது. மீனவர்களையும், படகையும் மீட்கும் பணியை மேற்கொண்டு வருகிறோம்’’ என கூறிஉள்ளனர். இதனிடையே நெடுந்தீவு பகுதி கடலில் மிதந்த 2 உடல்களைஇலங்கை கடற்படைமீட்டுள்ளனர். அவர்கள் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்