‘‘தை முதல் தேதியை தமிழ்ப் புத்தாண்டாக ஏற்க முடியாது,’’ என கார்த்திசிதம்பரம் எம்.பி. தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே கீழச்சிவல்பட்டியில் தமிழ் மன்றம் சார்பில் நடந்த தமிழர் திருநாள் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: நாங்கள் கூட்டணி வைத்திருக்கும் ஒரு கட்சி தை 1-ம் தேதியை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடி வருகிறது. அதை ஏற்கவே முடியாது. பருவ காலம் அடிப்படையில் பார்த்தால் சித்திரை 1-ம் தேதி தான் தமிழ்ப் புத்தாண்டு.
இதற்காக நான் யாருடன் வேண்டுமானாலும் விவாதம் நடத்தத் தயார். கடவுள் இல்லை, பகுத்தறிவு என்று பேசுவோர் கூட தேர்தல் வந்து விட்டால் மட்டும் நல்ல நேரம் பார்த்து தான் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். கடவுள் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என முன்னோர் கூறியுள்ளனர்.
ஏற்கெனவே உள்ள ஆலயங்களைப் புதுப்பித்து தரிசித்தாலே போதும். புதிதாக கோயில்கள், ஆலயங்கள், மசூதிகள் தேவையில்லை. தனிநபர் நம்பிக்கையை கொச்சைப்படுத்துவது தேவையில்லாத ஒன்று. நாம் சமமான கல்வி, மருத்துவம் வேண்டுமென விவாதம் செய்ய வேண்டுமே தவிர, தமிழ்ப் புத்தாண்டை ஏன் சித்திரையில் கொண்டாடுகிறாய்? தை மாதம் ஏன் கொண்டாடுகிறாய்? என்ற விவாதம் செய்வது தேவையில்லாத ஒன்று.
நான் மதச்சார்பின்மை கொள்கை, தமிழர் கலாச்சாரம், மக்களின் நியாயமான கோரிக்கைகளை எந்தவொரு காரணத்துக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.
தை முதல் தேதியை திமுகவினர் தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடி வருகின்றனர். இந் நிலையில், அவர்களுடன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், அதை கடுமையாக விமர்சித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago