கரோனா தடுப்பு நடவடிக்கையில் தடுப்பூசி திட்டம் இலக்கு சார்ந்தது அல்ல சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தகவல்

By செய்திப்பிரிவு

கரோனா தடுப்பூசி போடுவது இலக்கு சார்ந்த திட்டமல்ல. கரோனா தடுப்பில் அது ஒரு முக்கிய மைல் கல் என சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று கோவேக்சின் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். அதைத்தொடர்ந்து, சிறிது நேரம் மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் இருந்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:

கரோனா தடுப்பூசி போடுவது இலக்கு சார்ந்த திட்டமல்ல. கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில் இது ஒரு முக்கிய மைல் கல். கரோனா தடுப்பூசி போடுவதில்எவ்வித பாதகமும் நேரிடக் கூடாதுஎன்பதே நோக்கமாக இருந்தது. அதில், வெற்றியும் கிடைத்துள்ளது.

ஒரு நாளில் 16,600 பேருக்கு கரோனா தடுப்பூசி போடுவதற்கான திறன் சுகாதாரத் துறையிடம் உள்ளது. இந்தத் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் மருத்துவக் கல்வி நிலையங்களில் நல்ல வரவேற்பு உள்ளது. தடுப்பூசி போட்டுக் கொள்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்று கருதுகிறோம்.

கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள ஜன.25-ம் தேதி வரை முன்களப் பணியாளர்கள் பதிவு செய்யலாம். அதைத்தொடர்ந்து, 50 வயதுக்கு அதிகமான மற்றும் 50 வயதுக்கு கீழ் உள்ள கூட்டு நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு தடுப்பூசி இடப்படும்.

கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள மருத்துவத் துறையினர் 4.89 லட்சம் பேரும், காவல் துறையினர் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் 2 லட்சம் பேரும் இதுவரை பதிவு செய்துள்ளனர். கரோனா வைரஸின் 2-வது அலையைத் தடுக்க கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம். பொதுமக்கள் அலட்சியமாக இல்லாமல், அடுத்த சில மாதங்களுக்கும் அரசுக்கு தொடர்ந்து முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

அப்போது, மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, அரசு மருத்துவமனை முதல்வர் கே.வனிதா மற்றும் இந் திய மருத்துவ கவுன்சில் நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ஜெ.ராதா கிருஷ்ணனைத் தொடர்ந்து அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், பாதுகாவலர்கள் உள்ளிட்டோரும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்