திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்வதால், தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அணைப்பகுதிகளான பாபநாசத்தில் 14, மணிமுத்தாறில் 12, சேர்வலாறில் 15 செமீ மழை பதிவானது. அணைகள் அனைத்தும் நிரம்பியுள்ளதால், பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து நேற்று முன்தினம் இரவு 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் காட்டாற்று வெள்ளமும் சேர்ந்து தூத்துக்குடி மாவட்டம் மருதூர் அணைக்கட்டை தாண்டி நேற்று பிற்பகலில் 65 ஆயிரம் கனஅடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடியது.
ஆற்றின் கரையோரத்தில் உள்ள திருநெல்வேலி அருகே மீனாட்சிபுரம், கைலாசபுரம், சிந்துபூந்துறை, குறுக்குத்துறை, வண்ணார்பேட்டை ஆகிய இடங்களில் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மிதந்தன. அப்பகுதி மக்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்., வைகுண்டம் அருகே கொங்கராயக்குறிச்சி, ஆழ்வார்திருநகரி பகுதிகளில் வெள்ளம் கரையோர வீடுகளுக்குள் புகுந்தது. அப்பகுதி பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டனர். முறப்பநாடு, வல்லநாடு, முத்தாலங்குறிச்சி, ஆழ்வார்திருநகரி, கருங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் தாமிரபரணி ஆற்றின் இரு கரையோரங்களிலும் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களில் நெல் மற்றும் வாழைப்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
விஜயநாராயணம் ஐஎன்எஸ் கட்டபொம்மன் கடற்படை தளத்திலிருந்து 35 கடற்படை வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 50 பேர் விக்கிரமசிங்கபுரம் பகுதிகளில் மீட்பு பணிகளில் ஈடுபட்டுஉள்ளனர்.
குற்றாலம் அருவிகளில் இரண்டாவது நாளாக நேற்றும் வெள்ளப்பெருக்கு நீடித்துது. அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டது. பொங்கல் பொருட்கள் வியாபாரம் கடுமையாக பாதித்தது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago