ஓர் இனத்தின் அடையாளமான மொழி மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாப்பது சமுதாயத்தின் கடமை என ‘இந்து’ குழும வெளியீட்டு நிறுவன இயக்குநர் என்.ராம் வலியுறுத்தினார்.
நீலகிரி ஆவணக் காப்பகம் சார்பில் படுகரின மக்களின் வாழ்வியலைக் கொண்டு தயாரிக்கப்பட்ட நாட்காட்டி உதகையில் நேற்று வெளியிடப்பட்டது.
விழாவில் பங்கேற்ற நீலகிரி எம்பி. ஆ.ராசா பேசும்போது ‘‘நீலகிரி மாவட்டத்தில் மரபு, பண்பாட்டுச் செறிவுமிக்க ஒரு சமுதாயம் படுக சமுதாயம். திராவிட பண்பாட்டின் தொன்மையான ஓர் இனம் படுகரினம் என்று ஆராய்ச்சி கூறுகிறது’’ என்றார்.
நாட்காட்டியை வெளியிட்டு, ‘இந்து’ குழும வெளியீட்டு நிறுவன இயக்குநர் என்.ராம் பேசியதாவது:
படுக சமுதாய மக்கள் உபசரிப்பதில் சிறந்தவர்கள். இன்று (நேற்று) வெளியிடப்பட்ட நாட்காட்டியில் அவர்களது வாழ்வியல் குறித்த பல தகவல்கள் உள்ளன. படுகரின மக்கள் பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனர். படுக சமுதாய மக்களின் கலாச்சாரத்தில் ஆண்,பெண் சம உரிமை, வரதட்சணை வாங்காதது போன்ற பல சிறப்பம்சங்கள் உள்ளன.
மொழிதான் ஓர் இனத்தின் அடையாளம். திராவிட மொழி குடும்பத்தை சேர்ந்தது படுகமொழி. நீலகிரியில் வாழும் படுக சமுதாயம் மற்றும் பிற சமுதாயமக்கள் நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வருகின்றனர். மொழி மற்றும் கலாச்சாரத்தை பாதுகாப்பது படுக சமுதாயத்தில் உள்ள அனைவரின் கடமையாகும். இந்துத்துவா கருத்தியல் தமிழ்நாட்டுக்கு தேவையில்லை. அதிகாரத்தை வைத்து இந்துத்துவாவை திணிக்க மத்திய அரசு முயற்சித்தது தோல்வியில் முடிந்துள்ளது. தமிழகத்தில் அரசியல் மாற்றம் தேவை. அதிகாரத்துக்கு வரும் தலைவர்கள் இந்துத்துவாவை எதிர்த்துப் போராடவேண்டும். இவ்வாறு ‘இந்து’ என்.ராம் பேசினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago