கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையடிவாரத்தில் உள்ள சங்கராபுரம் அருகே உள்ள மல்லாபுரம் மற்றும் பாவளம் கிராமங்களைச் சேர்ந்த கருத்தப்பிள்ளை, பழனி மற்றும் அஞ்சலை ஆகியோர் கூட்டாக சேர்ந்து கடந்த 20 ஆண்டுகளாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகின்றனர்.
ஆடுகளை மேய்ச்சலுக்காக அவ்வப்போது மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்று வருவதுண்டு. கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் ஆடுகளை மலையடிவாரத்தில் உள்ள கொட்டகையில் அடைத்து பராமரித்து வந்தனர்.
நேற்று முன்தினம் காலை முதல் மிதமாக மழை பெய்து வந்த நிலையில் மாலை கனமழை பெய்யத் தொடங்கியது. விடிய விடிய பெய்த மழையால் கல்வராயன் மலை அடிவாரத்தில் பாப்பாத்தி மூளை ஓடை பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சில நிமிடங்களில் அப்பகுதியை தண்ணீர் சூழ்ந்ததில், ஆட்டுக் கொட்டகையில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகள் தண்ணீரில் அடித்துசெல்லப்பட்டன. கடும் வெள்ளப் பெருக்கால் உரிமையாளர்களால் காப்பாற்ற இயலவில்லை.
வெள்ள நீரில் சிக்கி 600 ஆடுகள் உயிரிழந்திருப்பதாக வும், 300-க் கும் மேற்பட்ட ஆடுகள் எஸ்.வி.பாளையம், ஊராங்கனி கிராமங்களின் ஓடைவழியாக அடித்துச் செல்லப்பட்டதாகவும் கூறினர்.
இதையடுத்து, ஆடு ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் என நிர்ணயம் செய்து, முதற்கட்டமாக 225 ஆடுகளுக்கு ரூ.6.75 லட்சம் இழப்பீட்டை, அதன் உரிமையாளர்களிடம் சார் ஆட்சியர் காந்த் வழங்கினார்.
இதேபோல சங்கராபுரம் அருகே சவுந்திரவள்ளிபாளையம் கிராமத்தில் கோழிப் பண்ணையை சூழ்ந்த மழைநீரால் 3,000 கோழிகள் உயிரிழந்தன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago