சென்னை, காஞ்சி, செங்கை, திருவள்ளூர் பகுதிகளில் விடிய விடிய கனமழை சாலைகள், குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் அவதி

By செய்திப்பிரிவு

வங்கக் கடலில் இருந்து ஈரப்பதம் மிகுந்த காற்று தமிழகம் நோக்கி வீசுவதால் சென்னை மற்றும் புறநகர் பகுதி, காஞ்சி, செங்கை, திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் நேற்று முன் தினம் நள்ளிரவு முதல் விடிய விடிய மழை பெய்து வந்தது. மழை கொட்டித் தீர்த்ததால் பகல் நேரத்திலும் இரவு போன்று காட்சியளித்தது. தொடர் மழையினால் சென்னையில் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியது.

குறிப்பாக ராயப்பேட்டை பெசன்ட் சாலை, ஜிபி சாலை, கிண்டி மடுவங்கரை, சைதாப்பேட்டை மார்க்கெட் சாலை, பேசின் பாலம், வியாசர்பாடி முல்லை நகர், , எழும்பூர் எத்திராஜ் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் தண்டையார்பேட்டை வ.உ.சி.நகர், வியாசர்பாடி கல்யாணபுரம், வேளச்சேரி ராம்நகர், ஆதம்பாக்கம், புளியந்தோப்பு உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்ததால் அப்பகுதி பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர். பல வீடுகளில் மழைநீர் புகுந்தது.

புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, ஆவடி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழையால் பல இடங்களில் மழைநீர் தேங்கியது.

நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் சென்னை நுங்கம்பாக்கத்தில் 6 செமீ, தரமணி, கிண்டி, சென்னை விமான நிலையம் ஆகிய இடங்களில் தலா 5 செமீ மழை பெய்துள்ளது. நேற்று காலை 8.30 மணி முதல் பிற்பகல் 2.45 மணி வரை அதிகபட்சமாக தரமணியில் 11 செமீ, சென்னை விமான நிலையத்தில் 10 செமீ, கிண்டியில் 8 செமீ, நுங்கம்பாக்கம், பூந்தமல்லி ஆகிய இடங்களில் தலா 7 செமீ, திருத்தணியில் 6 செமீ மழை பதிவாகி இருந்தது.

மழைநீரை வெளியேற்ற சென்னை மாநகராட்சியின் நடவடிக்கை குறித்து அதிகாரிகள் கூறியதாவது: மாநகராட்சி சார்பில் அதிக அளவில் மழைநீர் தேங்கும் பகுதிகளாக 24 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் மழைநீரை வெளியேற்றுவதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களை தங்க வைக்க 169 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன என்றனர்.

காஞ்சி, திருவள்ளூரில்...

காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பிற்பகல் வரையில் தொடர்ந்து மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சாலைகளில் மழைநீர் ஆறாக வழிந்தோடியது. காஞ்சிபுரம் 23 மி.மீ., ஸ்ரீபெரும்புதூர் 8.80, உத்திரமேரூர் 17, வாலாஜாபாத் 12, செம்பரம்பாக்கம் 17, குன்றத்தூர் 15 மில்லி மிட்டர் மழையளவு பதிவாகியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில், மாமல்லபுரம் 35.40 மி.மீ., திருக்கழுக்குன்றம் 33, மதுராந்தகம் 62, செய்யூர் 31, தாம்பரம் 9, கேளம்பாக்கம் 52.20 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது.

இதில், திருப்போரூர், மாமல்லபுரம் அதன் சுற்றுப்புற கடலோர பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் கனமழை தொடர்ந்து பெய்ததால் ஓஎம்ஆர் சாலை மற்றும் மாமல்லபுரம் நகரப் பகுதியில் உள்ள சாலைகளில் மழைநீர் வழிந்தோடியது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதலே பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதில் நேற்று காலை நிலவரப்படி ஊத்துக்கோட்டை 15 மி.மீ, திருவள்ளூர் 15, பூந்தமல்லி 7, ஜமீன்கொரட்டூர் 3, குமிடிப்பூண்டி 11, திருவாலங்காடு 9, திருத்தணி 5, ஆர்.கே.பேட்டை 3, பொன்னேரி 12, செங்குன்றம் 33, சோழவரம் 33, பூண்டி 14.60, தாமரைப்பாக்கம் 28 மில்லி மீட்டர் என மழையளவு பதிவாகியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்