அதிமுகவை உடைக்க ஸ்டாலின் முயற்சி முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

அதிமுகவை உடைக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முயற்சிப்பதாக முதல்வர் பழனிசாமி குற்றம்சாட்டினார்.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம், அலங்காநத்தம் பிரிவு சாலை ஆகிய இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: அதிமுகவில் சாதாரண தொண்டன் கூட முதல்வர் பதவி வரை உயரலாம். ஆனால், திமுகவில் குடும்ப அரசியல் நடத்தப்படுகிறது.

நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் தருவதாக திமுகவினர் கூறினர். ஆனால் அதை செயல்படுத்தவில்லை. இதற் காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நில அபகரிபை தடுக்க தனிப்பிரிவை உருவாக்கி நடவடிக்கை எடுத்தார். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் எங்கள் ஆட்சியில் தொடர்ந்து வழங்கப்படும். எதிர்க்கட்சியினரின் பொய் பிரச்சாரத்தை நம்ப வேண்டாம் என்றார்.

முன்னதாக சேந்தமங்கலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மலைவாழ் மக்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் பழனிசாமி கலந்துரையாடினார். அமைச்சர்கள் பி.தங்கமணி, வெ.சரோஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருச்சி மாவட்டம் முசிறி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட தொட்டியம் வாணப்பட்டறை மைதானத்தில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அவர் பேசியது:

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக ஆட்சியைக் கலைக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டன. இப்போதும், திட்டமிட்டு அதிமுகவை உடைக்க மு.க.ஸ்டாலின் முயற்சி செய்கிறார். வலிமையான இயக்கமான அதிமுகவை எந்தக் காலத்திலும் உடைக்க முடியாது என்றார்.

வாழைத் தண்டு பிஸ்கட்

தொடர்ந்து, தொட்டியம் பண்ணைத் தோட்டம் பகுதியில் வாழை, வெற்றிலை, கரும்பு விவசாயிகளை முதல்வர் பழனிசாமி சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவர் பேசும்போது, ‘‘விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையுடன் ஆலோசனை நடத்தியதில் வாழைப் பட்டையில் இருந்து துணி, வாழைத் தண்டில் இருந்து பிஸ்கட் தயாரிக்கலாம் என்று யோசனை தெரிவித்தார். இந்தத் திட்டத்தை ஐஐடி உதவியுடன் தமிழகத்தில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கோதாவரி- காவிரி இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த முயற்சி செய்து வருகிறோம்” என்றார்.

அமைச்சர்கள் பி.தங்கமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், என்.நடராஜன், எஸ்.வளர்மதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்