புரெவி புயல் பாதிப்பு குறித்து மத்திய குழு ஆய்வு

புதுக்கோட்டை, மயிலாடுதுறை மாவட்டங்களில் புரெவி புயலால் ஏற்பட்ட பயிர்கள் பாதிப்புகள் குறித்து மத்திய குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.

தமிழகத்தில் புரெவி புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிடுவதற்காக மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலாளர் அசுடோஷ் அக்னிஹோத்ரி தலைமையிலான மத்திய குழுவினர் நேற்று புதுக்கோட்டை மாவட்டத்துக்கு வந்தனர்.

திருவரங்குளம் அருகே நம்புகுழி கிராமத்தில் சேதமடைந்த நெற்பயிர்களையும், தெட்சிணாபுரத்தில் சேதமடைந்த மக்காச்சோளப் பயிர்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது, மாவட்டத்தில் புயலால் 3,000 ஏக்கர் நெற்பயிர்கள் உட்பட 3,735 ஏக்கரில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வேளாண் அலுவலர்கள் கூறினர். ஆய்வின்போது, தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி, மாநில வேளாண் கூடுதல் இயக்குநர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர், இக்குழுவினர் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தை அடுத்த புத்தூர், தரங்கம்பாடி வட்டம் நல்லாடை ஆகிய கிராமங்களில் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களை பார்வையிட்டு, விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

அப்போது, மாவட்ட ஆட்சியர்கள் மயிலாடுதுறை லலிதா, நாகை பிரவீன் பி.நாயர், அதிகாரிகள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE