படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு நேற்று காலை திடீரென ரத்தஅழுத்தம் ஏற்பட்டது. இதனால்,அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தனி மருத்துவர் குழு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 168-வதுதிரைப்படம் ‘அண்ணாத்த’. கரோனா பரவல் காரணமாக 8 மாதங்கள் வரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் கடந்த 14-ம் தேதி தொடங்கியது.இதற்காக ரஜினிகாந்த் தொடர்ந்து 13 முதல் 14 மணி நேரம் வரை படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.
இதனிடையே, கடந்த 22-ம் தேதி ரஜினி உட்பட படக்குழுவில் உள்ள அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், ரஜினிக்கு தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதியானது. ஆனால், படப்பிடிப்பில் உள்ள 6பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர்.
இந்நிலையில், நேற்று காலை ரஜினிகாந்துக்கு திடீரென உடல் சோர்வு ஏற்பட்டது. ரத்த அழுத்தம் குறைய தொடங்கியது. இதனால், அவரை மகள் ஐஸ்வர்யா மற்றும் சிலர் ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தனி மருத்துவர் குழு சிகிச்சை அளித்துவருகிறது.
ரத்த அழுத்தத்தில் மாற்றம் ஏற்பட்டதே இதற்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 24 மணி நேரம் வரை ரஜினிகாந்த் தீவிர கண்காணிப்பு பிரிவில் வைத்து கண்காணிக்கப்படுவார் எனவும்டிஸ்சார்ஜ் செய்ய 2 அல்லது 3 நாட்கள் வரை ஆகலாம் என்றும் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உடல்நலம் விசாரிப்பு
திமுக தலைவர் ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ரஜினியின் உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார். இதேபோன்று சிரஞ்சீவி, பவன் கல்யாண் உள்ளிட்ட நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் ரஜினியின் உடல் நலம் குறித்து விசாரித்து வருகின்றனர். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில் ‘நண்பர் ரஜினிகாந்த் விரைவில் நலம்பெற வாழ்த்துகள்’ என கூறியுள்ளார்.தகவல் அறிந்த ரசிகர்கள் பலர்ஹைதராபாத் தனியார் மருத்துவமனை முன் குவியத் தொடங்கினர். ரஜினிகாந்தை பார்க்க யாரும் வரவேண்டாம் என அவரது குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago