அனைத்துத் துறைகளிலும் தமிழக அரசு புரட்சி முதல்வர் பழனிசாமி பெருமிதம்

By செய்திப்பிரிவு

``தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் அதிமுக அரசு புரட்சி படைத்து வருகிறது” என்று, முதல்வர் பழனிசாமி கூறினார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நேற்று நடைபெற்ற அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி இல்ல விழாவில் முதல்வர் பேசியதாவது: அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் மருத்துவக் கல்வியில் சேர 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். மருத்துவர் ஆக வேண்டும் என்ற அந்த மாணவர்களின் கனவை அதிமுக அரசு நிறைவேற்றி உள்ளது.

குடிமராமத்து திட்டம் கொண்டுவரப்பட்டு, அனைத்து ஏரி, குளங்கள், குட்டைகள், ஊருணிகள் தூர்வாரப்பட்டு மழை நீர் முழுவதும் சேமிக்கப்பட்டுள்ளது. கல்வியில் புரட்சி, நீர் மேலாண்மையில் புரட்சி, தொழில் புரட்சி என, அனைத்துத் துறைகளிலும் அதிமுக அரசு புரட்சி படைக்கிறது. இவ்வாறு முதல்வர் பேசினார். அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், எம்பிக்கள், அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ஜல்லிக்கட்டு நடைபெறும்

முதல்வர் பேசிவிட்டு புறப்பட்டுச் சென்ற பின்னர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வந்தார். அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ கத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும்” என்றார்.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கிறிஸ்தவ இயக்கம் சார்பில், நேற்று முன்தினம் இரவு நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் செல்வதற்கு ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.37 ஆயிரமாக உயர்த்தி வழங்க ஆணையிட்டுள்ளேன். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. இந்த அரசின் மீது வேண்டுமென்றே அபாண்டம் சுமத்துபவர்களை இயேசுநாதர் பார்த்துக் கொள்வார். அனைத்து மதமும் சம்மதம் என்ற கருத்தை ஏற்று அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. பதவி ஆசை இருக்கலாம். அதன் மீது வெறி இருக்கக்கூடாது. இங்கு பலருக்கு பதவி வெறி உள்ளது. எனக்கு பதவி மீதெல்லாம் ஆசை கிடையாது. முதல்வர் என்பதை ஒரு பணியாகத்தான் நினைக்கிறேன் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்