‘பிக்பாஸ்’ கமல் அரசியலுக்கு தகுதியற்றவர் அரியலூரில் முதல்வர் பழனிசாமி விமர்சனம்

By செய்திப்பிரிவு

குடும்பங்களை சீரழிக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் கமல்ஹாசன் அரசியலுக்கு தகுதியற்றவர் என்று முதல்வர் பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமை வகித்தார். ஆட்சியர் த.ரத்னா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், முதல்வர் பழனிசாமி, திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த முதல்வரிடம், லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி, அரசு எவ்வழியோ அதிகாரிகள் அவ்வழி என கமல் தெரிவித்துள்ளாரே என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த முதல்வர், “லஞ்ச ஒழிப்புத்துறையும் அரசின் கீழ் தானே இயங்குகிறது. அரசு வழிதானே அவர்களும் செயல்படுகின்றனர். ஓய்வுபெற்ற பிறகு கமல் அரசியலுக்கு வந்துள்ளார். 70 வயதில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

பிக்பாஸ் நடத்துபவர்கள் எல்லாம் அரசியலுக்கு வந்தால் எப்படி இருக்கும். அவரது படங்கள் மற்றும் பிக்பாஸை பார்த்தால் ஒரு குடும்பம் கூட நல்லாயிருக்காது. அப்படிப்பட்டவர் ஒரு கட்சியின் தலைவராக உள்ளார். அவரின் கேள்விக்கெல்லாம் கருத்து சொல்ல முடியுமா?

பிக்பாஸில் என்ன இருக்கிறது. அதை கமல் நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியை பார்த்தால் குழந்தைகளும், நன்றாக இருக்கும் குடும்பமும் கெட்டுப்போகும். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் குடும்பங்களை கமல் சீரழிக்கிறார். நாட்டு மக்களுக்கு நல்லது செய்பவர் அவரல்ல, நன்றாக இருக்கும் குடும்பத்தை கெடுப்பது தான் அவரது வேலை.

எம்.ஜி.ஆர். நடித்த படங்கள் எவ்வளவு நல்ல படங்களாக உள்ளன. கமல் ஒரு படமாவது நல்ல படமாக எடுத்துள்ளாரா?” என பதில் அளித்தார்.

நிகழ்ச்சியில், எம்எல்ஏக்கள் ஜெயங்கொண்டம் ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம், குன்னம் ஆர்.டி.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பெரம்பலூர்

இதையடுத்து, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற முதல்வர் பழனிசாமி, அங்கு செய்தியாளர்களிடம் கூறியது:

எம்.ஜி.ஆர். பெயரைச் சொன்னால்தான் ஓட்டு வாங்க முடியும் என்பதால் பல்வேறு அரசியல் கட்சியினர் அவரது பெயரைச் சொல்லி வருகின்றனர். கமல்ஹாசனும் அப்படித்தான். கமல்ஹாசனுக்கு தனிப்பட்ட செல்வாக்கு இல்லாததால், எம்.ஜி.ஆர். பெயரைச் சொல்லி ஆதரவு திரட்டி வருகிறார். எம்.ஜி.ஆர். பெயரை சொல்ல உரிமை உள்ள ஒரே இயக்கம் அதிமுக. எம்.ஜி.ஆர். பெயரை சொல்ல வேறு யாருக்கும் தார்மீக உரிமை கிடையாது என முதல்வர் கூறினார்.

பின்னர், ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்றார். இதில், ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கடபிரியா, எம்எல்ஏக்கள் ஆர்.டி.ராமச்சந்திரன், இரா.தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்