சின்னத்திரை நடிகை சித்ராவை தற்கொலைக்குத் தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டார்.
சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த 9-ம் தேதி பூந்தமல்லி அருகே பழஞ்சூர் நட்சத்திர ஹோட்டலில், தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இதுதொடர்பாக நசரத்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இதில், கணவர் ஹேம்நாத்திடம் தொடர்ந்து 6 நாட்கள் நடந்த விசாரணையில், ஹேம்நாத் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்தார்.
இதையடுத்து சித்ரா மற்றும் ஹேம்நாத்தின் மொபைல் போன்களில் பதிவான தகவல்களை வைத்து, போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில் தெரிய வந்ததாவது:
ஹேம்நாத், சித்ராவை பதிவு திருமணம் செய்துக் கொண்ட பிறகு, சித்ரா மீது சந்தேகப்பட்டு, அவரிடம் வீண் கேள்விகள் கேட்டு அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளார்.
மேலும், படப்பிடிப்புத் தளத்தில் சித்ராவிடம் தகராறு செய்வதை வாடிக்கையாக வைத்திருந்து உள்ளார் ஹேம்நாத். சித்ரா கடைசியாக பங்கேற்ற படப்பிடிப்புக்குசென்ற ஹேம்நாத், சித்ராவை ஓட்டலுக்கு காரில் அழைத்து வரும்போதே வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த வாக்குவாதம் ஓட்டல் அறைக்கு சென்ற பிறகும் தொடர்ந்துள்ளது.
ஒரு கட்டத்தில் சித்ராவிடம், “நீ இருப்பதைக் காட்டிலும் இறப்பதே மேல், செத்துப்போ” என்று கூறிவிட்டு ஹேம்நாத் ஓட்டல் அறையில் இருந்து வெளியேறி உள்ளார். அதன் பிறகே சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவ்வாறு விசாரணையில் தெரியவந்ததாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த விசாரணையின் அடிப்படையில், சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக ஹேம்நாத் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவரை நேற்று முன்தினம் நள்ளிரவில் கைது செய்தனர். தொடர்ந்து, பூந்தமல்லி ஜெ.எம்.1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஹேம்நாத், பொன்னேரி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும், சித்ரா தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் திவ்யாஸ்ரீ, நேற்று முன் தினம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சித்ராவின் பெற்றோர், சகோதரி, சகோதரர் ஆகியோரிடம், ஹேம்நாத் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணைக் கேட்டு சித்ராவை தொந்தரவு செய்தனரா? என தீவிர விசாரணை நடத்தினார்.
தொடர்ந்து, நேற்று காலை 10 மணி முதல், மதியம் 2 மணி வரை ஹேம்நாத்தின் பெற்றோர் ரவிச்சந்திரன் - வசந்தாவிடம் கோட்டாட்சியர் விசாரணை நடத்தினார்.
அந்த விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரன் கூறும்போது, ‘’நாங்கள் சித்ராவின் ஊதியத்தையோ, அவரது குடும்பத்தினரிடம் வரதட்சணையோ கேட்கவில்லை. கோட்டாட்சியர் விசாரணைக்கு ஆஜராக இருந்த நிலையில் ஹேம்நாத் அவசர கதியில் கைது செய்யப்பட்டுள்ளார். போலீஸார் யாரை காப்பாற்றுகிறார்கள் என தெரியவில்லை. வேறு ஏதோ நடக்கிறது’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago