வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் டிச.18-ம் தேதி சென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசு உண்மைக்துப் புறம்பான செய்திகளை சொல்லி, டெல்லியில் போராடும் விவசாயிகள் மீது அவதூறு பிரச்சாரங்கள் செய்து, விவசாயிகளின் போராட்டத்தை பிளவுபடுத்த முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது.
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், விவசாயிகள் போர்வையில் போராட்டக்களத்தில் நக்ஸலைட்கள் உள்ளே நுழைந்து இருக்கிறார்கள் என்று அப்பட்டமான பொய்யைச் சொல்லி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதை அவர் திரும்பப் பெற வேண்டும்.
நியாயமான கோரிக்கையை ஏற்று, சட்டத்தை திரும்பப் பெறுவதற்கு பிரதமர் உடனடியாக விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
இதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. போராட்டக் குழு அறைகூவலுக்கு இணங்க தமிழகத்திலும் ரயில் நிலையங்கள், மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம்.
மேலும், டிச.18-ம் தேதி காலை 10 மணிக்கு தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் சென்னை ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago