ஆந்திர மாநிலம் வி.கோட்டாவில் இருந்து கருங்கல் கம்பங்களை ஏற்றிக் கொண்டு வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள அப்புகல் பகுதியில் உள்ள கோழிப் பண்ணைக்கு நேற்று முன்தினம் இரவு மினி லாரி வந்து கொண்டிருந்தது. மினி லாரியில் வி.கோட்டா பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளர்கள் கோவிந்த ராஜ் (45), ராமன் (40) வரதப்பன் (42) ஆகியோர் இருந்தனர். கருங்கல் கம்பங்கள் மீது 3 பேரும் உறங்கியவாறு வந்தனர்.
மினி லாரி நேற்று அதிகாலை 5.30 மணியளவில் அணைக்கட்டு அருகேயுள்ள கீழ்கொத்தூர் சாலையில் ஏரிக்கொல்லை பகுதியில் சென்றது. அங்குள்ள சாலை திருப்பத்தில் லாரி வேகமாக திரும்பிபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி அதிக பாரத்தின் காரணமாக அப்படியே ஒரு பக்கம் சாய்ந்தது. இதில், கருங்கல் கம்பங்கள் சரிந்து விழுந்ததில் அதன்மீது உறங்கிக் கொண்டிருந்த 3 பேரும் அதன் அடியில் சிக்கி அதே இடத்தில் உயிரிழந்தனர்.
விபத்துக்கு காரணமான மினி லாரி ஓட்டுநர் வி.கோட்டா பகுதியைச் சேர்ந்த குப்புசாமி மற்றும் கருங்கல் ஏற்றி வந்த ஏஜென்ட் அஜய் ஆகியோர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அணைக்கட்டு போலீஸார் 3பேரின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
விராலிமலை
மதுரை ஆத்திகுளம் சிந்து தெருவைச் சேர்ந்தவர் குப்பு பிச்சை மகன்கள் பைசல் கனி (45), முகமது ரிசாத்(38). கோரிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நசருல்லா மகன் அபுதாகிர் என்ற முகமது சபியுல்லா(44). திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கோடங்கி நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் அப்துல் ரஹீம் மகன் அபுபக்கர்(49). இவர்கள் 4 பேரும்மதுரையில் இருந்து திருச்சி நோக்கி நேற்று காரில் சென்றுகொண்டிருந்தனர். காரை அபுதாகிர் ஓட்டினார்.புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ளகொடும்பாளூர்-வடுகாட்டுப்பட்டி பகுதியில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், பைசல்கனி, முகமது ரிசாத், அபுபக்கர் ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த அபுதாகிர்மணப்பாறை தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.
பின்னர், இந்த விபத்து குறித்து விசாரிப்பதற்காக விராலிமலை போலீஸார் அங்கு சென்றிருந்தனர். அப்போது, சாலை யோரம் நிறுத்தப்பட்டிருந்த காவல் ஆய்வாளரின் கார் மீது மதுரையில் இருந்து சென்னை நோக்கி சென்ற மற்றொரு கார் மோதியது. அதில், காயமடைந்த மதுரையைச் சேர்ந்த 4 பேரும் கொடும்பாளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago