லஞ்ச ஒழிப்புப் போலீஸார் அதிரடி சோதனை விருதுநகரில் வாகன ஆய்வாளர்களிடம் ரூ.26 லட்சம், 100 பவுன் நகை பறிமுதல் சேலத்தில் பேரூராட்சிகள் உதவி இயக்குநர் கைது

By செய்திப்பிரிவு

விருதுநகரில் மோட்டார் வாகன ஆய்வாளர்களிடம் கணக்கில்வராத ரூ.25 லட்சம், 100 பவுன்நகைகளை லஞ்ச ஒழிப்புப் போலீஸார் பறிமுதல் செய்தனர். சேலத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனையில் பேரூராட்சிகள் உதவி இயக்குநர் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர் வட்டாரப் போக்குவரத்து வாகன ஆய்வாளர் கலைச்செல்வி(33), அவரது கணவர் ராஜா, மதுரை வடக்கு வட்டாரப் போக்குவரத்து வாகன ஆய்வாளர் சண்முக ஆனந்த்(40), விருதுநகரைச் சேர்ந்த புரோக்கர் அருள்பிரசாத் ஆகியோர் ஏராளமான பணத்துடன் சூலக்கரையில் உள்ள கலைச்செல்வி வீட்டில் இருந்து மதுரைக்கு காரில் செல்வதாக லஞ்ச ஒழிப்புப் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

அவர்கள் சென்ற கார்களைலஞ்ச ஒழிப்புப் போலீஸார் துரத்திச் சென்று மதுரை சாலையில் உள்ள சத்திரரெட்டியபட்டி சோதனைச் சாவடி அருகே மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் கணக்கில் வராத 25 லட்சம் ரூபாய், 100 பவுன் நகைகள் இருந்தது தெரியவந்தது. அவற்றை லஞ்ச ஒழிப்புப் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

பின்னர், 4 பேரையும் விருதுநகர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு அழைத்து வந்து லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி கருப்பையா தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர்.

சேலம், நாமக்கல் மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அலுவலகத்தில் உதவி இயக்குநராக கனகராஜ்(57) என்பவர்பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு சேலத்தில் இருந்து சொந்த ஊரான கோவைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். சேலம் அரியானூர் பகுதியில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் காரை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.

அப்போது, காரில் 2 பைகளில் கணக்கில் வராத ரூ.3.50 லட்சம் பணம் இருந்தது. அதை போலீஸார் பறிமுதல் செய்து, கனகராஜை கைது செய்தனர். தொடர்ந்து கோவையில் உள்ள கனகராஜின் வீட்டில் போலீஸார் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்