சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தலில் குலுக்கல் முறையில் வெற்றிபெற்ற அதிமுக துணைத் தலைவர் பதவியையும் கைப்பற்றியது

By செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றியது. நேற்று நடந்த தேர்தலில் அதிமுக, திமுக சம வாக்குகள் பெற்றதால் குலுக்கல் முறையில் அதிமுக வேட்பாளர் பொன்.மணிபாஸ்கரன் தலைவராகவும், சரஸ்வதி அண்ணா துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

சிவகங்கை மாவட்டத்திலுள்ள 16 மாவட்ட ஊராட்சி வார்டுகளில், அதிமுக 8 இடங்களிலும், திமுக கூட்டணியில் திமுக 5, காங்கிரஸ் 2, இந்திய ஜனநாயக கட்சி ஒரு இடத்திலும் வென்றன. இதனால் அதிமுக, திமுக கூட்டணி சம பலத்தில் உள்ளன.

இந்நிலையில் ஜன.11, ஜன.30, மார்ச் 4 ஆகிய தேதிகளில் அறிவிக்கப்பட்ட மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் தேர்தலை அதிமுக கவுன்சிலர்கள் தொடர்ந்து புறக்கணித்ததால் பெரும்பான்மை இல்லாமல் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டன.

தொடர்ந்து கரோனாவால் மேலும் 6 மாதங்களாக தேர்தல் தள்ளிப்போனது. இதையடுத்து திமுகவைச் சேர்ந்த மாவட்ட கவுன்சிலர்கள் சிலர் தேர்தலை நடத்த வலியுறுத்தி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தனர். டிச.4-ல் தேர்தல் நடத்தப்படும் என தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இந்நிலையில், கரோனா தடுப்புப் பணி ஆய்வுக்காக டிச.4-ல்முதல்வர் பழனிசாமி சிவகங்கை வந்தார். தேர்தலன்று முதல்வர் ஆய்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக சார்பில் தமிழக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்ததால் டிச.11-க்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இவ்வாறு 4 முறை ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் ஒருவழியாக நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான பி.மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது. தலைவர் பதவிக்கான வாக்குப்பதிவில் அதிமுக, திமுக சம வாக்குகள் பெற்றன.

இதையடுத்து குலுக்கல் முறையில் தேர்வு நடந்தது. இதில் அதிமுக வேட்பாளர் பொன்.மணிபாஸ்கரன் வெற்றி பெற்றார்.

துணைத் தலைவர் தேர்தலில் அதிமுக சார்பில் சரஸ்வதி அண்ணாவும், காங்கிரஸைச் சேர்ந்த சுந்தர்ராஜனும் போட்டியிட்டனர். இருவரும் சம வாக்குகள் பெற்றதால், குலுக்கல் முறையில்அதிமுக வேட்பாளர் சரஸ்வதி அண்ணா வெற்றி பெற்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்