மழைநீரில் மூழ்கிய பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகளிடம் முதல்வர் பழனிசாமி உறுதியளித்தார்.
‘புரெவி' புயல் காரணமாக, நாகை மாவட்டத்தில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக முதல்வர் பழனிசாமி நேற்று நாகைக்கு வந்தார். கனமழையால் இடிந்து விழுந்த நாகூர் ஆண்டவர் தர்கா குளத்தின் சுற்றுச்சுவரை பார்வையிட்ட அவர், குளத்தை சீரமைக்க போதுமான நிதி ஒதுக்கப்படும் என உறுதியளித்தார்.
தொடர்ந்து, கீழையூர் ஒன்றியம் மேலப்பிடாகைக்கு வந்த முதல்வரிடம், கனமழையால் தண்ணீரில் மூழ்கிய நெற்பயிரை விவசாயிகள் எடுத்துவந்து காட்டினர். அப்போது முதல்வர், “யாரும் அச்சப்பட வேண்டாம். பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
பின்னர், தலைஞாயிறு அருகே பழங்கள்ளிமேட்டில் புயல் நிவாரண முகாமில் தங்கியுள்ள 360 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, போர்வை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
திருமருகல் அருகே திருச்செங்காட்டாங்குடியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த மாலாவின் கணவரிடம் ரூ.4 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். பின்னர் மயிலாடுதுறை, செம்பனார்கோவில் பகுதிகளுக்குச் சென்று மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். ஆய்வின்போது, அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஓ.எஸ்.மணியன், சி.விஜயபாஸ்கர் உடனிருந்தனர்.
தொடர்ந்து, திருவாரூர் மாவட்டத்துக்கு வந்த முதல்வர் பழனிசாமி, திருத்துறைப்பூண்டியை அடுத்து உள்ள கொக்கலாடி பகுதிக்குச் சென்று, மழைநீரில் மூழ்கியுள்ள சம்பா பயிர்களை வயலில் இறங்கி பார்வையிட்டார். திருத்துறைப்பூண்டியில் அரசு நிவாரண முகாம்களில் தங்கியிருந்தவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். தொடர்ந்து, தென்னவராயநல்லூரில் விவசாய பிரதிநிதிகளை சந்தித்து பேசினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் முதல்வர் பழனிசாமி கூறியதாவது:
'புரெவி' புயலின்போது 2,74,061 பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு, அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன. புயலுக்கு 7 பேர் உயிரிழந்துள்ளனர். 9 பேர் காயமடைந்துள்ளனர். 5,509 வீடுகள் சேதமடைந்துள்ளன. இதுவரை 1,32,657 ஏக்கர் பரப்பளவில் பயிர்கள் சேதமடைந்துள்ளன. பல பகுதிகளில் தண்ணீர் வடியாமலிருப்பதால், தொடர்ந்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.
ஆ.ராசா குற்றம் செய்ததால்தான், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் அமைச்சராக இருந்தபோதே கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். போதிய கால அவகாசத்தில் ஆதாரங்களை ஒப்படைக்காததால் நீதிமன்றத்தில் விடுதலை செய்யப்பட்டாரே தவிர, அவர் குற்றவாளி அல்ல என நிரூபிக்கப்படவில்லை.
8 வழிச்சாலை திட்டம் மத்திய அரசின் திட்டம். நிலம் கையகப்படுத்தும் பணி மட்டுமே மாநில அரசைச் சார்ந்தது. வாகனங்களின் பெருக்கம், மாநிலத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டுதான் 8 வழிச்சாலை திட்டம் கொண்டு வரப்படுகிறது என்றார். அப்போது அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், காமராஜ் உடனிருந்தனர்.
வேளாங்கண்ணி பேராலயம், நாகூர் தர்காவில் முதல்வர் வழிபாடு
நாகை மாவட்டத்துக்கு நேற்று வந்த முதல்வர் பழனிசாமி, வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்துக்குச் சென்று பிரார்த்தனை செய்தார். அப்போது, அவருக்கு மாதா சொரூபத்தை நினைவுப் பரிசாக பேராலய அதிபர் பிரபாகரன் அடிகளார் வழங்கினார். பின்னர், நாகூர் ஆண்டவர் தர்காவுக்கு சென்ற முதல்வரை நாகூர் தர்கா பரம்பரை கலிபா மஸ்தான் சாகிப் வரவேற்றார். அங்கு, தர்கா ஆண்டவர் சன்னதியில் முதல்வர் வழிபாடு நடத்தினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago