அரசுப் பள்ளி மாணவர் நீட் தேர்வில் 500 மதிப்பெண் எடுத்தும் தமிழகம் - புதுச்சேரி எல்லைப் பிரச்சினையால் மருத்துவ இடம் கிடைக்காத சோகம்

By செ.ஞானபிரகாஷ்

தமிழகம் - புதுச்சேரி எல்லைப் பிரச்சினையால் அரசுப் பள்ளியில் படித்த மாணவர் நீட்டில் 500 மதிப்பெண் எடுத்தும் மருத்துவ இடம் கிடைக்கவில்லை.

புதுச்சேரியை ஒட்டியுள்ளது புராணசிங்குபாளையம் கிராமம். இக்கிராமத்தின் ஒரு பகுதி புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும், மற்ற பாதி தமிழ்நாட்டுக்கும் சொந்தமானது. தமிழ்நாட்டின் கீழ் வரும் புராணசிங்குபாளையத்தில் வசிப்பவர் ஆர்.மணிகண்டன். இவர் எல்கேஜி முதல் 5-ம் வகுப்பு வரை புராணசிங்குபாளையத்தில் உள்ள புதுச்சேரி அரசு தொடக்கப் பள்ளியிலும், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை புராணசிங்குபாளையத்தில் உள்ள புதுச்சேரி அரசு பாவேந்தர் பாரதிதாசன் மேல்நிலைப் பள்ளியிலும் படித்தார்.

கூலித் தொழிலாளியின் மகனான மணிகண்டன் எந்தவொரு வெளிப் பயிற்சியும் எடுக்காமல் கடந்த 2019-ல் நீட் தேர்வில் 170 மதிப்பெண் எடுத்தார். தொடர்ந்து படித்து 2020-ல் 500 மதிப்பெண் பெற்றுள்ளார். இவர், தமிழகப் பகுதிக்குள் வருபவர் என்பதால் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் எம்பிபிஎஸ், பிடிஎஸ் சேர்க்கைக்காக தமிழக அரசில் விண்ணப்பித்தார். ஆனால், அவர் புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் மேல்நிலைக் கல்வியை முடித்ததால் அவரது விண்ணப்பத்தை தமிழ்நாடு அரசு நிராகரித்துவிட்டது.

தமிழகத்தில் பிற மாநில மாணவர்கள் 5 ஆண்டுகள் அரசுப் பள்ளியில் தொடர்ந்து படித்தால் அவர்கள் பொதுப்பிரிவில் மேற்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்ற விதிமுறை உள்ளது. அதே விதிமுறைகள் புதுச்சேரி அரசில் இருந்தாலும் சென்டாக் மூலம் விண்ணப்பிக்க புதுச்சேரி அரசில் விதிமுறை இல்லை. எனவே அவர் புதுச்சேரி அரசின் மூலம் எம்பிபிஎஸ், பிடிஎஸ் சேர்க்கைக்காக சென்டாக்கில் விண்ணப்பிக்க இயலவில்லை.

இதுதொடர்பாக மணிகண்டனின் வகுப்பு ஆசிரியரான ஸ்ரீ.ஸ்ரீராம் கூறியதாவது: கூரை வீட்டில் வசிக்கும், கூலி வேலை செய்யும் பெற்றோரின் மகனான மணிகண்டன் நீட் தேர்வில் 500 மதிப்பெண்கள் எடுத்தும் மருத்துவப் படிப்பு எட்டாக்கனியாகி விட்டது. எல்லைப் பிரச்சினை தொடர்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுக்கும், உயர் அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளேன்.

தமிழகத்தைப் பின்பற்றி புதுச்சேரியிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கென்று சிறப்பு உள்ஒதுக்கீடு குறித்து தீவிரமாக பேசப்பட்டு வரும் இந்தச் சூழலில், விதிகளில் சிறப்பு திருத்தம் செய்து சென்டாக் 2020-ல் மருத்துவ விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ள புதுச்சேரி அரசு ஆவண செய்ய வேண்டும்.

மாணவர் மணிகண்டன் புதுச்சேரி அரசுப் பள்ளியில் படித்தாலும் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தமிழக அரசு பாட புத்தகத்தைத்தான் படித்தார். தமிழக அரசின் 10 மற்றும் 12-ம் வகுப்பில் தமிழக அரசு நடத்திய பொதுத் தேர்வைத்தான் எழுதி, தமிழக மாணவர்களைப்போல் நீட்டில் 500 மதிப்பெண் எடுத்துள்ளார். எனவே, தமிழக அரசும் இதை பரிசீலிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்