கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் நீலகிரி மலை ரயில் சேவையை கடந்த 8 மாதங்களுக்கு முன் தெற்கு ரயில்வே நிர்வாகம் ரத்து செய்தது. இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த இந்தி படக் குழுவினர், தாங்கள் தயாரிக்கும் வெப் டிவி தொடருக்காக மலை ரயிலைப் படம் பிடிக்க, தெற்கு ரயில்வேயிடம் அனுமதி கோரியிருந்தனர்.
அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து, குன்னூர்-உதகை இடையே, கேத்தி ரயில் நிலையப் பகுதியில் மலை ரயில் காட்சிகளைப் படமாக்கி வருகின்றனர். ஒருநாள் படப் பிடிப்புக்கு மலை ரயிலைப் பயன்படுத்த முன்வைப்புத் தொகையுடன் ரூ.5 லட்சம் செலுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
மேலும், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நெருங்கும் நிலையில், சிறப்பு ரயில் முன்பதிவுக்காக பலரும் ரயில்வே நிர்வாகத்தை அணுகினர். கரோனா தொற்று குறைந்து வரும் சூழலில், சிறப்பு ரயிலை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, "சுற்றுலாப் பயணிகளின் விருப்பத்துக்கு ஏற்ப உதகை-மேட்டுப்பாளையம் இடையே டிசம்பர் 5-ம் தேதி முதல் முதல் ஜனவரி 3-ம் தேதி வரை 13 நாட்களுக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதற்கான முன்பதிவு தற்போது நடந்து வருகிறது. இந்த ரயில், 4 பெட்டிகளுடன் இயக்கப்படும். ஒருமுறை பயணத்துக்கு கட்டணமாக, முன்வைப்புத் தொகையுடன் ரூ.5 லட்சம் வசூலிக்கப்படும்" என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago