திமுக ஆட்சிக்கு வந்தால், அனைத்து தொழில் நிறுவனங்களும் பாதுகாக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
திருப்பூர் மாவட்டத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல் சிறப்பு பிரச்சாரப் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. காணொலி மூலம் கட்சியினர் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
பெரியார், அண்ணா முதன்முதலாக சந்தித்த திருப்பூரில் ‘தமிழகம் மீட்போம்’ பிரச்சாரக் கூட்டம் நடைபெறுவது சிறப்புக்குரியது.
திமுக கொண்டுவந்த மேம்பாலத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டதால்தான், திருப்பூரில் போக்குவரத்து நெரிசல் தொடர்கிறது. கடந்த 5 ஆண்டுகளாக தொழில் நிறுவனங்கள் திணறிக் கொண்டிருக்கின்றன. இதற்கு, மத்திய பாஜக அரசு மற்றும் அதிமுக அரசே காரணம்.
2008-ம் ஆண்டிலேயே அத்திக்கடவு-அவிநாசி திட்டத்துக்காக பல முயற்சிகளை மேற்கொண்டவர் கருணாநிதி. இதற்கு ஒப்புதல் கோரி மத்திய அரசிடம் விண்ணப்பிக்கப்பட்டது. ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீதிமன்றம் கேள்வி எழுப்பி, மக்கள் போராட்டத்துக்குப் பிறகே இத்திட்டத்தைச் செயல்படுத்தி உள்ளனர்.
மத்திய அரசின் பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி திட்டங்கள் தொழில் துறையையும், பொருளாதாரத்தையும் நசுக்கிவிட்டன. திருப்பூர் ஏற்றுமதி வர்த்தகம் 24 சதவீதம் சரிந்துள்ளதற்கு மத்திய அரசின் செயல்பாடுகளே முக்கியக் காரணமாகும்.
தமிழக இளைஞர்களுக்கு கிடைக்க வேண்டிய பணிகள் மற்றும் உரிமைகள் பிற மாநிலத்தவருக்குச் செல்கின்றன. திமுக ஆட்சிக்கு வந்தால், கல்வி, வேலைவாய்ப்பு அனைவருக்கும் சமமானதாக இருக்கும். சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்கள் பாதுகாக்கப்படும். தொழில் துறையினர் விரும்பும் திட்டங்கள் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago