‘நிவர்’ புயல் மீட்பு நடவடிக்கைகளுக்காக கடலூர் மாவட்டத்துக்கு வந்துள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி பாராட்டு தெரிவித்து விருந்தளித்தார்.
‘நிவர்’ புயல் தடுப்பு நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்தில் பல்வேறு முன் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன. அதன் ஒரு பகுதியாக அரக்கோணத்தில் இருந்து 142 பாதுகாப்பு படை வீரர்கள் அடங்கிய தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினர் கடலூர் மாவட்டத்துக்கு கடந்த 23-ம் தேதி வந்திருந்தனர். இப்படை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, கடலூரில் 3 குழுக்களும், சிதம்பரம், பரங்கிப்பேட்டை பகுதிகளில் 3 குழுக்களும் முகாமிட்டு மீட்பு பணிகளை மேற்கொண்டது.
இப்படையினரை சிறப்பிக்கும் விதமாக கடலூரில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றுக்குநேற்று முன்தினம் இரவு அவர்களை வரவழைத்து, பாராட்டு தெரிவித்த மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி விருந்து அளித்தார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிநவ், கமாண்டர் மனோஜ் பிரபாகரன், கூடுதல் ஆட்சியர் ராஜகோபால் சுங்கரா, மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) கார்த்திகேயன், வருவாய் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் மற்றும் அரசு அலுவலர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேரிடர் குழுவினரின் மீட்புப் பணிகளை பாராட்டினர்.
‘இன்று (நவ.29) வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகும்; அதனால் டிச.1 முதல் டிச.3வரை மழைப் பொழிவு இருக்கும்’ என்று வானிலை ஆய்வு மையம்தெரிவித்துள்ளதால், கடலூர் மாவட்டத்துக்கு வந்துள்ள தேசியபேரிடர் மீட்புக் குழுவினர் அங்கேயே தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago