தேர்தல் கூட்டணி குறித்து கட்சியின் தலைமை விரைவில் அறிவிக்கும் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தகவல்

சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி, பாஜக போட்டியிடும் தொகுதிகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்து கட்சியின் அகில இந்திய தலைமை விரைவில் அறிவிக்கும் என்று பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.

திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

பாஜக சார்பில் நவ.6-ம் தேதி திருத்தணியில் தொடங்கிய வேல் யாத்திரை, கரூரில் நேற்று நடைபெற்றது. தஞ்சாவூரில் நேற்று முன்தினம் நடைபெறவிருந்த வேல் யாத்திரை ரத்து செய்யப்பட்டது. இதுமட்டுமின்றி திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறவிருந்த வேல் யாத்திரைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதேவேளையில், வேல் யாத்திரை நிறைவு நிகழ்ச்சி திட்டமிட்டபடி டிச.5-ம் தேதி திருச்செந்தூரில் நடைபெறும். அதற்கு முந்தைய நாளான டிச.4-ம் தேதி எஞ்சிய 3 அறுபடை வீடுகளில் சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படும்.

அரசுடன் இணைந்து ‘நிவர்’ புயல் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட பாஜகவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேல் யாத்திரை தொடர்பாக என் மீது எத்தனை வழக்குகள் தொடரப்பட்டுள்ளன என்று இன்னும் கணக்கு பார்க்கவில்லை.

பாஜகவுடனான கூட்டணியை அதிமுக உறுதி செய்துள்ள நிலையில், கூட்டணி மற்றும் போட்டியிடும் தொகுதிகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கட்சியின் அகில இந்திய தலைமை விரைவில் அறிவிக்கும். அதிமுக கூட்டணியில் 40 தொகுதிகளை பாஜக கேட்டதாக வெளியாகும் தகவல்கள் உண்மையானவை அல்ல.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக் கூட்டணிதான் ஆட்சியைப் பிடிக்கும். 7 பேர் விடுதலை விவகாரத்தில் சரியான நேரத்தில் சரியான முடிவை தமிழக ஆளுநர் அறிவிப்பார் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்