ரூ.15 கோடி மதிப்பு செல்போன் கொள்ளை மத்திய பிரதேசத்தில் ஒருவர் கைது

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரத்தில் இருந்து ரூ.15 கோடி மதிப்புள்ள செல்போன்களுடன் மும்பையை நோக்கி கண்டெய்னர் லாரி புறப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கடந்த மாதம் 21-ம் தேதி சென்று கொண்டிருந்தபோது, மற்றொரு லாரியில் வந்த மர்ம கும்பல் ஓட்டுநர்களை தாக்கி செல்போனுடன் லாரியை கடத்திச் சென்றது.

இக்கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய கிருஷ்ணகிரி எஸ்பி பண்டிகங்காதர், 4 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 20 பேர் கொண்ட தனிப்படையை அமைத்தார். தனிப்படை போலீஸாரின் விசாரணையில், மத்திய பிரதேச மாநிலம் தீவாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த அங்கித்ஜான்ஜா தலைமையிலான கொள்ளை கும்பலுக்கு, செல்போன் கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. மத்திய பிரதேச மாநிலம் சென்ற தனிப்படை போலீஸார் ஒரு மாதமாக தீவிர விசாரணை நடத்தினர்.

அதில், இக்கொள்ளையில் தொடர்புடைய பரத்தேவாணி(37) என்பவரை நேற்று கைது செய்தனர். இதுகுறித்து போலீஸார் கூறும்போது, பரத்தேவாணி மத்திய பிரதேச மாநிலம் இண்டூரைச் சேர்ந்தவர். தற்போது டெல்லியில் வசித்து வரும் இவருக்கு செல்போன் கொள்ளை சம்பவத்தில் முக்கிய பங்கு உள்ளது. செல்போன்களை கொள்ளை கும்பலிடம் இருந்து வாங்கி, வேறு ஒரு தரப்புக்கு விற்றுள்ளார். இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரை தேடும் பணி தொடர்கிறது. கொள்ளைபோன செல்போன்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

மத்திய பிரதேச மாநிலத்தில் கைதான பரத்தேவாணியை தனிப்படை போலீஸார் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு அழைத்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்