திமுக எம்எல்ஏ பூங்கோதை தற்கொலை முயற்சியா? திருநெல்வேலி தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

By செய்திப்பிரிவு

தமிழக முன்னாள் அமைச்சரும், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதி திமுக எம்எல்ஏவுமான டாக்டர் பூங்கோதை ஆலடிஅருணா திருநெல்வேலியில் தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவர் தற்கொலைக்கு முயன்றதாக பரவிய தகவலாலும், முந்தைய நாள் நடைபெற்ற கட்சிக்கூட்டத்தில் நிர்வாகிகளின் காலில் அவர் விழுவதுபோல் பரவும் வீடியோவாலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் திமுக முக்கிய பிரமுகர்களில் ஒருவராக கருணாநிதி காலத்திலேயே பூங்கோதை ஆலடிஅருணா இருந்து வருகிறார். திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பி, அவரது தாயார் ராஜாத்தி அம்மாள் ஆகியோர் தென்மாவட்டங்களில் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் எல்லாம் பங்கேற்று, அவர்களுக்கு நெருக்கமானவராக இருந்துவந்தார். ஆனால், சமீபகாலமாக கனிமொழி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பூங்கோதையைப் பார்க்க முடியவில்லை.

பொறுப்பாளருடன் பனிப்போர்

கடந்த சில ஆண்டுகளாகவே ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக இருந்த சிவ பத்மநாபனுக்கும், பூங்கோதைக்கும் இடையே பனிப்போர் நிலவிவந்தது. சமீபத்தில், தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளராக சிவ பத்பநாபன் மீண்டும் நியமிக்கப்பட்டது, பூங்கோதைக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

காலில் விழுந்தார்

தென்காசி மாவட்டம் கடையம் அருகே திருமலையப்பபுரத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற திமுக பூத் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்க பூங்கோதை சென்றபோது அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவருக்கு மேடையில் அமர இருக்கையும் அளிக்கப்படவில்லை. கடையம் ஒன்றிய திமுக செயலாளர் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

`கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் சுப, துக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருவதில்லை. கட்சி நிகழ்ச்சிகளில் சரியாக கலந்து கொள்வதில்லை’ என்று, பூங்கோதையிடம், அவர்கள் வாக்குவாதம் செய்தனர்.

இதையடுத்து, கூட்டம் நடைபெற்ற அரங்கில் மேடைக்கு எதிரே பூங்கோதை தரையில் அமர்ந்தார். `பிரச்சினை செய்வதற்காகவே வருகிறீர்களா?’ என்று நிர்வாகிகள் கேட்டபோது, சிலரின் காலை தொட்டு வணங்கிய பூங்கோதை, தொடர்ந்து அங்கேயே அமர்ந்திருந்தார். பின்னர் அங்கிருந்து வெளியே செல்வதும், உள்ளே வருவதுமாக இருந்ததால் கூட்டத்தில் சலசலப்பு நீடித்தது. பின்னர் பாதியிலேயே கூட்டத்திலிருந்து பூங்கோதை வெளியேறினார். இதுதொடர்பான வீடியோ பதிவுகள் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், மிகுந்த மனஉளைச்சலுக்கு அவர் ஆளாகியிருந்ததாக தெரிகிறது.

தற்கொலை முயற்சி?

இந்நிலையில் திருநெல்வேலி சந்திப்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் மயங்கிய நிலையில் பூங்கோதை நேற்று காலை அனுமதிக்கப்பட்டார். அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை உட்கொண்டு, அவர் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் பரவியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன், அவை தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான மு.அப்பாவு உள்ளிட்ட நிர்வாகிகள், மருத்துவமனைக்கு சென்று பூங்கோதையின் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.

இதுதொடர்பாக, அப்பாவு கூறும்போது, ``பூங்கோதை காலையில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென்று மயங்கியுள்ளார். உடனே அவரை திருநெல்வேலியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது அவர் நல்லநிலையில் உள்ளார். அவர் தற்கொலைக்கு முயன்றதாக வதந்தி பரப்பப்பட்டுவிட்டது. அதில் எதுவுமே உண்மையில்லை என்று தெரிவித்தார்.

தனியார் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் முகமது அராபத் நேற்று மாலையில் வெளியிட்ட அறிக்கையில், மயங்கிய நிலையில் அனுமதிக்கப்பட்ட பூங்கோதை தற்போது நல்ல நிலையில் இருப்பதாகவும், அவசர சிகிச்சைப் பிரிவில் அவர் உள்ளதாகவும், மருத்துவர்கள் குழு தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்