அரசின் நீட் பயிற்சி வகுப்பில் சேர 18,200 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், இந்த பயிற்சிக்கு மாணவர்களிடம் வரவேற்பு உள்ளதாகவும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக ஈரோடு மாவட்டம் கோபியில் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்க சிறப்பு வேளாண்மண்டலம், குடிமராமத்துத் திட்டத்தைத் தொடர்ந்து ஏழை அரசுப் பள்ளி மாணவர்களும் மருத்துவக் கல்வி படிக்கும் வாய்ப்பு ஆகிய முக்கிய சாதனைகளை அரசு படைத்துள்ளது. நாட்டில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள், உள் ஒதுக்கீட்டின் மூலம், மருத்துவக் கல்வி படிக்கும் வாய்ப்பினை அரசு வழங்கியுள்ளது.
நீட் தேர்வினை ரத்து செய்யவேண்டும் என்பதே அரசின் கொள்கை முடிவு. இதுகுறித்து, பிரதமரிடம், முதல்வர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். நீட் தேர்வை எதிர்கொள்ள அரசு அளிக்கும் பயிற்சியில் பங்கேற்க 18 ஆயிரத்து 200 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த பயிற்சிக்கு மாணவர்களிடம் வரவேற்பு உள்ளது.
அரசு உத்தரவிட்டு பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்னர், தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதனை நாங்கள் கண்காணித்துக் கொண்டு இருக்கிறோம். அதையும் மீறி பள்ளிகள் திறக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். கல்வி கட்டணத்தை பெற்றோர்களிடம் வற்புறுத்தி வசூலிக்கக்கூடாது எனவும், குறிப்பிட்ட கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் தனியார் பள்ளிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
ஒரு மாவட்டத்தில் கரோனா குறைந்துள்ளது என்பதற்காக அங்கு பள்ளிகளைத் திறக்க முடியாது. பள்ளி திறப்பு குறித்து பெற்றோர், கல்வியாளர்களின் கருத்துகளை தெரிந்து கொண்ட பிறகு முதல்வர் அறிவிப்பார். மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வில் குளறுபடிகள் ஏதும் இல்லை என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் கூறியுள்ளார் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago