திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று முன்தினம் இரவு காவல் எல்லை தெய்வமான துர்கையம்மன் உற்சவத்துடன் தீபத் திருவிழா தொடங்கியது. இந்நிலையில், நாளை காலை கொடியேற்றம் நடைபெறுகிறது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நேற்று முன்தினம் இரவு காவல் எல்லை தெய்வமான துர்கையம்மன் உற்சவத்துடன் தொடங்கியது. எல்லை தெய்வ வழிபாட்டின் இரண்டாம் நாளான நேற்றிரவு பிடாரியம்மன் உற்சவம் நடைபெற்றது.
தீப விழாவின் முக்கிய நிகழ்வாக கோயில் வளாகத்தில் உள்ள தங்கக் கொடிமரத்தில் ஆகம விதிப்படி நாளை (20-ம் தேதி) காலை 5.30 மணியில் இருந்து 7 மணிக்குள் விருச்சிக லக்கனத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது. கோயிலில் தொடர்ந்து, 10 நாட்களும் காலை மற்றும் இரவில் பஞ்சமூர்த்திகள் உற்சவம் நடைபெறும்.
இந்தாண்டு மாட வீதிகளில் உற்சவ வீதியுலா ரத்து செய்யப்பட்டு கோயிலின் 5-ம் பிரகாரத்தில் வீதியுலா நடைபெறுகிறது. திருவண்ணாமலை தேர் திருவிழா கரோனா பரவல் அச்சத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தீப விழாவின் 10-ம் நாளான வரும் 29-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோயில் வளாகத்தில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர அண்ணாமலை மீது மகாதீபமும் ஏற்றப்படும். கோயில் மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகள் தீப தரிசனம் எழுந்தருளளும், அர்த்தநாரீஸ்வரர் காட்சியும் நடைபெறும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago