அமெரிக்காவின் ஸ்டான்ட் போர்டு பல்கலைக்கழகம் சமீபத்தில் வெளியிட்ட உலக அளவிலான சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 10 பேராசிரியர்கள் இடம் பெற்றுள்ளனர்.
அமெரிக்காவின் ‘‘ஸ்டான்போர்டு’’ பல்கலைக்கழகத்தை சேர்ந்த டாக்டர் ஜான்லோனிடிஸ் தலைமையிலான குழுவினர், உலக அளவில் தலை சிறந்த விஞ்ஞானிகள் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலை வெளியிட்டுள்ளனர். இதில், உலக அளவில் இந்தியாவில் 2 சதவீதம் பேர் சிறந்தவிஞ்ஞானிகளாக இடம் பெற்றுள்ளனர்.
இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் உள்ள வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் விஜயலட்சுமி பயோசெப்ரேஷன் தொழில்நுட்பம் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளார்.
அதேபோல, பேராசிரியர் அஸ்வானிகுமார் செருக்குரி தகவல் தொழில்நுட்பத்துறை ஆராய்ச்சியிலும், பேராசிரியர் முருகன் பயோ - மெட்டீரியல்ஸ் - செல்லுலார் மற்றும் மூலக்கூறு தெரனோடிக்ஸ் ஆராய்ச்சியிலும், பேராசிரியர் நிலஞ்சனா மித்ராதாஸ் உயிர் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறையிலும்,பேராசிரியர் ரங்கைய்யா சிவில் பொறியியல் துறையிலும், பேராசிரியர் படல்குமார் மண்டல் மற்றும் பேராசிரியர்மோகனா ரூபன் மேம்பட்ட அறிவியல் துறையிலும், பேராசிரியர் கணபதி மற்றும் பேராசிரியர் பிரசாந்த் இயந்திரவியல் பொறியியல் துறையிலும், பேராசிரியர் ஜான்கென்னடி மேம்பட்ட அறிவியல் துறை ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், இவர்கள் உலகின் தலை சிறந்த ஆராய்ச்சி இதழ்களில்ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டு சாதனை படைத்துள்ளனர். விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன் தலை சிறந்த விஞ்ஞானிகளாக இடம் பெற்ற விஐடி பேராசிரியர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, "விஐடி பல்கலைக்கழகம் பல்வேறு துறைகளில், ஒரு துறையோடு மற்றொரு துறையும் இணைந்து ஆராய்ச்சியில் வளர்ந்து வருகிறது. முக்கிய தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு துறைகளிலும் விஐடி பல்கலைக்கழகம் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதுதவிர சமுதாய வளர்ச்சிக்கும், மக்களுக்கு பயன்படும் வகையிலும் பல்வேறு ஆராய்ச்சிகள் வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகின்றன" என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago