நெல்லையில் பாஜக நிர்வாகி மீது துப்பாக்கிச் சூடு முன்னாள் ராணுவ வீரர் கைது

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி பாளையங்கோட்டையில் பாஜக இளைஞர் அணி பொதுச் செயலாளர் துப்பாக்கியால் சுடப்பட்டார். இதுதொடர்பாக, முன்னாள் ராணுவ வீரரை கைது செய்து, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாளையங்கோட்டை பெருமாள்புரம் தாமஸ் 6-வது தெருவைச் சேர்ந்தவர் பெரியதுரை (34). அப்பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். திருநெல்வேலி மாவட்ட பாஜக இளைஞர் அணி பொதுச் செயலாளராக பொறுப்பு வகிக்கிறார். இவருக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் முன்னாள் ராணுவ வீரர் ஜெபமணி (70) என்பவருக்கும் ஏற்கெனவே முன்பகை இருந்துள்ளது. கராத்தே செல்வினின் அண்ணன்தான் ஜெபமணி. இவர் வங்கியொன்றில் காவலாளியாக பணிபுரிகிறார்.

நேற்று காலை பெரியதுரையின் இறைச்சி கடை முன் நின்று ஜெபமணி சிகரெட் பிடித்துள்ளார். இதனை பெரியதுரை கண்டித்துள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்தை பெரியதுரை தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். ஆத்திரமடைந்த ஜெபமணி தனது வீட்டில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வந்து பெரியதுரையை சுட்டுள்ளார். இதில் பெரியதுரையின் வலது முழங்கையில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது. அவர் தனியார்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சம்பவ இடத்தில் பெருமாள்புரம் போலீஸார் விசாரணை நடத்தினர். ஜெபமணி மற்றும் அவரது மகன் சர்ச்சில் ஆகியோரை பிடித்து விசாரித்தனர். பின்னர் ஜெபமணி கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்த துப்பாக்கியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இத்தகவல் அறிந்ததும் பாஜகமாவட்டத் தலைவர் மகாராஜன் தலைமையில் நிர்வாகிகள் பெருமாள்புரம் காவல் நிலையத்துக்கு திரண்டு வந்தனர். ஜெபமணி மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று, அவர்கள் போலீஸாரிடம் வலியுறுத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்