எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது தொடங்கியது. நீட் தேர்வில்தகுதி பெற்ற மாணவ, மாணவிகள் ஆர்வமாக விண்ணப்பித்து வருகின்றனர். நவ. 16-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியாகிறது.
தமிழகத்தில் 26 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீத இடங்கள் போக 2,991 எம்பிபிஎஸ் இடங்கள், 153 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இதேபோல், 14 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 1,057 எம்பிபிஎஸ் இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 893 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் 18 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 1,070 பிடிஎஸ் இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 690 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. அரசு மற்றும் தனியார்கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை மருத்துவக் கல்வி இயக்குநரகம் நடத்துகிறது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் அரசு மருத்துவக் கல்லூரிகளில் நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டுமுதல்முறையாக ஆன்லைன் விண்ணப்பம் கொண்டு வரப்பட்டது. ஆன்லைனில் விண்ணப்பித்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் மாணவர்கள் சமர்ப்பித்தனர். இந்த ஆண்டு முழுவதுமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், www.tnhealth.org மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பது நேற்று தொடங்கியது.
நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவ, மாணவிகள் ஆர்வமாக விண்ணப்பித்து வருகின்றனர். வரும் 12-ம் தேதி மாலை 5 மணிவரை விண்ணப்பிக்கலாம்.
கல்லூரிகள், கட்டணம், ஆன்லைனில் விண்ணப்பிப்பது போன்ற விவரங்களுக்கு இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ள தகவல் தொகுப்பேட்டைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். 044-28364822, 9884224648, 9884224649, 9884224745, 9884224746 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு தகவலைப் பெறலாம்.எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வரும் 16-ம் தேதி வெளியிடப்படவுள்ளது. அடுத்த சில தினங்களில் கலந்தாய்வு தொடங்கவுள்ளது.
நீட் தேர்வு மதிப்பெண்
நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற உள்ளது. பிளஸ் 2 மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. இந்த ஆண்டுநடைபெற்ற நீட் தேர்வை தமிழகத்தில் இருந்து விண்ணப்பித்த 1,21,617 பேரில் 99,610 பேர் எழுதினர்.இதில், 57,215 பேர் தேர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
அரசு பள்ளி மாணவர்கள்
தமிழகத்தில் இந்த ஆண்டு முதல் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த உள்ஒதுக்கீடு தற்போது நடைமுறையில் உள்ள 69 சதவீதஇடஒதுக்கீட்டில் வழங்கப்படவுள்ளது. இடஒதுக்கீட்டின் கீழ்வராத அரசுப் பள்ளி மாணவர்களுக்கு (ஒசி பிரிவு) மீதமுள்ள 31 சதவீதபொதுப்பிரிவு இடங்களில் இடம்வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசு ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களில் 395 இடங்கள் அரசுப் பள்ளிமாணவர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் 747 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 6-ம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் மட்டுமே இந்த 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கு தகுதியானவர்கள்.சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago