ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர்ராமதாஸ் ஆகியோர் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு சிறைவாசிகளான 7 பேரின் விடுதலை குறித்த தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் வரையறையின்றி காலம்தாழ்த்தி வருவது மனிதநேயமற்றது, அதிகார அத்துமீறலான செயலாகும்.
உச்ச நீதிமன்றம் அதிருப்தி
கடந்த 29 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவிப்பவர்களில் ஒருவரான பேரறிவாளனின் கருணை மனு மீது ஆளுநர்முடிவெடுக்காதது குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிருப்திதெரிவித்துள்ளனர். இதன் பிறகாவது, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்குரிய முடிவினை ஆளுநர் விரைந்து எடுக்க வேண்டும். அதிமுக அரசும்இனியும் வாய்மூடி வேடிக்கை பார்த்திராமல் உரிய முறையில் வலியுறுத்த வேண்டும்.பாமக நிறுவனர் ராமதாஸ்: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர்விடுதலை குறித்து முடிவெடுப்பதில் ஆளுநர் தேவையற்ற காலதாமதம் செய்வதை அனுமதிக்க முடியாது. ஆளுநரிடம் தமிழக அரசு அழுத்தம் கொடுத்து ஒப்புதல் பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
நம்பிக்கை ஒளி
உச்ச நீதிமன்றத்தின் இந்த கண்டிப்பு நிறைந்த வார்த்தைகள் 7 பேர் விடுதலை தொடர்பான விவகாரத்தில் புதிய நம்பிக்கை ஒளியை ஏற்படுத்தியுள்ளது.உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி 7 பேரையும் விடுதலை செய்ய கடந்த 2018 செப்டம்பரில் ஆளுநருக்கு தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்தது. ஆனால், இதுவரை ஆளுநர் எந்த முடிவையும் எடுக்கவில்லை. தற்போது உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை பயன்படுத்தி ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்து 7 பேரையும்உடனடியாக விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago