நாகர்கோவில்: கரோனா ஊரடங்கால் மூடப்பட்டிருந்த பத்மநாபபுரம் அரண்மனை 7 மாதங்களுக்குப் பின்பு நேற்று திறக்கப்பட்டது. இங்கு கட்டுப்பாடுகளுடன் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
திருவனந்தபுரத்துக்கு முன்னதாக, கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை அடுத்துள்ள பத்மநாபபுரம்தான், திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகராக இருந்தது. மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டு, தற்போதும் பொலிவுமாறாமல் இருக்கும் அரண்மனைகளில், பத்மநாபபுரம் அரண்மனை தென்னிந்தியாவிலேயே மிகப்பெரியது. தமிழக எல்லைக்குள் இருந்தாலும் இந்த அரண்மனை கேரள அரசின் பராமரிப்பில் உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களுள் இதுவும் ஒன்று.
கரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் பத்மநாபபுரம் அரண்மனைக்கு பார்வையாளர்கள் வர தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று தொடங்கி பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. 7 மாதங்களுக்குப் பின்பு அரண்மனை திறக்கப்பட்டதால், நேற்று காலையில் இருந்து பார்வையாளர்கள் ஆர்வத்துடன் அரண்மனைக்கு சென்றனர்.
அரண்மனை வாசலிலேயே தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் சோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர். மேலும், முகக்கவசம் அணிந்து, கரோனா கட்டுப்பாடுகளுடன் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க பார்வையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago