ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை கோரி வழக்கு கங்குலி, விராட் கோலி, தமன்னா உட்பட 6 பேருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

By செய்திப்பிரிவு

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்குத் தடை கோரிய வழக்கில் கிரிக்கெட் வீரர்கள் கங்குலி, விராட்கோலி, நடிகர்கள் பிரகாஷ்ராஜ், சுதீப், ராணா, நடிகை தமன்னா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி, சூதாட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி மதுரை வழக்கறிஞர் எஸ்.முத்துக்குமார் உயர் நீதிமன்றக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இதேபோல் வழக்கறிஞர் ஐ.முகமது ரஸ்வி, ஆன்லைன் ரம்மி, சூதாட்ட விளம்பரங்களில் நடிக்கும் கிரிக்கெட் வீரர்கள் கங்குலி, விராட்கோலி, நடிகர்கள் பிரகாஷ்ராஜ், சுதீப், ராணா மற்றும் நடிகை தமன்னா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தன.

மனுதாரர்களின் வழக்கறிஞர்கள் வாதிடும்போது, “ஆன்லைன் விளையாட்டுகளில் பணத்தை இழந்த பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஏற்கெனவே வடிவமைக்கப்பட்ட விளையாட்டில் வெற்றிபெற முடியாது என்பது தெரியாமலேயே பலர் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகி வாழ்க்கையை இழந்து வருகின்றனர்” என்றனர்.

அரசு வழக்கறிஞர் வாதிடும்போது, “ஆந்திரா, தெலங்கானாவில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்பிரச்சினையை தமிழக அரசு தீவிரமாகக் கவனித்துக் கொண்டிருக்கிறது. இதுதொடர்பாக பதில் மனுத் தாக்கல் செய்ய 10 நாட்கள் அவகாசம் தர வேண்டும்” என்றார்.

அதற்கு நீதிபதிகள், “ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்குத் தடை விதிக்க உயர் நீதிமன்றம்ஜூலை மாதமே உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவின் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? ஆன்லைன் விளையாட்டுகளில் பணத்தை இழந்த 10 பேர் தற்கொலை செய்துள்ளனர்.

தெலங்கானாவில் பணம் வைத்து விளையாடும் அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அசாம், ஒடிசா, நாகலாந்து மாநிலங்களில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு முறைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?” என்றனர்.

மேலும் நீதிபதிகள், “பிரபலமானவர்கள் விளம்பரங்களில் நடிக்கும்போது மக்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் அவரவர் பாக்கெட்டுகளை நிரப்புவதில்தான் கவனம் செலுத்துகின்றனர். பொதுமக்கள் பலர் தங்களைப் பின்பற்றுவார்கள் என்பது தெரிந்திருந்தும் பிரபலமானவர்கள் அவ்வாறு செயல்படுவது ஏன்? பிரபலமானவர்கள் ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக மக்கள் மனதில் ஒரு பிம்பத்தை உருவாக்கி விளையாட வைக்கப்படுகின்றனர். இதன் மூலம் மக்களின் உணர்வுகளுடன் விளையாடுகிறார்கள்” என்றனர்.

அரசு வழக்கறிஞர் வாதிடும்போது, “நாட்டில் ஆன்லைன் விளையாட்டில் 25 ஆயிரம் கோடி அளவுக்குப் பணம் புழங்குகிறது. ஆன்லைன் லாட்டரிக்கு முதலில் தடை விதித்தது தமிழக அரசுதான்” என்றார். பிளே கேம்ஸ் நிறுவன வழக்கறிஞர் வாதிடும்போது, “ஆன்லைன் ரம்மி விளையாட்டு சட்டப்பூர்வமாக நடத்தப்படுகிறது. விளையாடுவோருக்கு சில கட்டங்களில் எச்சரிக்கை தரப்படும்” என்றார்.

இதையடுத்து, மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள், கிரிக்கெட் வீரர்கள் கங்குலி, விராட்கோலி, நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சுதீப், ராணா, நடிகை தமன்னா ஆகியோர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை நவ.19-க்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்