சாத்தான்குளத்தில் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் தர் உட்பட 10 போலீஸார் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 9 பேர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதில் உதவி காவல் ஆய்வாளர் ரகு கணேஷ், தலைமைக் காவலர் முருகன் ஆகியோர் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றக் கிளையில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில், இருவரும் கைது செய்யப்பட்டு 130 நாட்கள் கடந்துவிட்டன. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
சிபிஐ வழக்கறிஞர் வாதிடும்போது, இரட்டைக் கொலையில் ரகுகணேஷ், முருகன் ஆகியோர் முக்கியக் குற்றவாளிகளாக உள்ளனர். தந்தை, மகன் இருவரையும் மிருகத்தனமாகத் தாக்கியதில் இருவருக்கும் முக்கியப் பங்கு உள்ளது. இரட்டைக் கொலையில் மனுதாரர்கள் இருவருக்கும் தொடர்பு இருப்பது குறித்து காவலர் ரேவதி வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், விசாரணை மற்றும் ஆவணங்கள் அடிப்படையில் மனுதாரர்கள் இருவரும் முக்கியக் குற்றவாளிகளாகக் கருதப்படுகின்றனர். எனவே, மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்கினால் விசாரணை பாதிக்கப்படும். இந்த வழக்கின் விசாரணை மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் நவ.11-ம் தேதி தொடங்குகிறது. எனவே மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஜாமீன் மனுக்களைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago