தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தஞ்சாவூரில் நேற்று பொது வேலைநிறுத்தம் தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றது.
இதில் பங்கேற்ற அகில இந்திய தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான மு.சண்முகம், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்தும், வேளாண் வணிக சட்டங்களை திரும்ப பெற வேண்டும், மோட்டார் வாகன சட்டத்தை திருத்த வேண்டும் என வலியுறுத்தியும் அகில இந்திய அளவில் வரும் 26-ம் தேதி பொது வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுத் துறை ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர்.
தமிழக அரசு 8 மணி நேர வேலை என்பதை மாற்றி 12 மணி நேர வேலை என அரசாணை கொண்டு வந்துள்ளது. இதனால் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
போனஸ் தொடர்பாக தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசாமல், தமிழக அரசு குறைவான 10 சதவீத போனஸ் அறிவிப்பை தன்னிச்சையாக அறிவித்துள்ளது. இதை தொழிலாளர்கள் யாரும் ஏற்க மாட்டார்கள். இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோரி வரும் 9-ம் தேதி அரசுப் போக்குவரத்துக் கழகம், மின்வாரியம், டாஸ்மாக், தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகம் உள்ளிட்ட அரசுத் துறைகளின் மண்டல அலுவலகங்கள் முன்பாக தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
இந்தக் கருத்தரங்கில் நாகை, கும்பகோணம், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய போக்குவரத்துக் கழக மண்டலங்களின் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளின் கூட்டமைப்பினர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago