அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டி குலதெய்வ கோயிலில் சிறப்பு வழிபாடு

By செய்திப்பிரிவு

அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டி அவரது குலதெய்வ கோயிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

அமெரிக்க அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில், ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார். இவர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.

கமலா ஹாரிஸின் குடும்பத்தினர் வழிபாடு செய்த குலதெய்வக் கோயிலான தர்மசாஸ்தா கோயிலில், அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டும் என்று துளசேந்திரபுரம் கிராம மக்கள் நேற்று சிறப்பு வழிபாடு செய்தனர்.

இதில் பங்கேற்ற அனைவருக்கும், கமலா ஹாரிஸ் தனக்கு பிடித்த உணவு என்று கூறிய இட்லி, வடை பிரசாதமாக வழங்கப்பட்டது.

மேலும் அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டி துளசேந்திரபுரத்தில் பல்வேறு இடங்களில் மக்கள் பதாகைகளை வைத்திருந்தனர்.

சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்த பைங்காநாடு சுதாகர் கூறியதாவது: துளசேந்திரபுரம் கிராமத்தில் வாழ்ந்து, எங்கள் கோயிலில் வழிபட்ட மூதாதையர் குடும்பத்தின் வழித்தோன்றலான கமலா ஹாரிஸ் குடும்பத்தினர் இன்றளவும் துளசேந்திரபுரம் தர்மசாஸ்தா கோயிலுக்கு நன்கொடை வழங்கி வருகிறார்கள்.

கமலா ஹாரிஸ் பெயர் கோயிலின் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் அவர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அவரது குலதெய்வ கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினோம். தேர்தலில் வெற்றி பெற்று, கமலா ஹாரிஸ் இந்த கோயிலுக்கு நேரில் வந்து வழிபட வேண்டும் என்பது எங்களுடைய ஆசை என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்