கேரளாவை போல தமிழகத்திலும் காய்கறி விலை நிர்ணய சட்டம் கொண்டுவர வேண்டும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

By செய்திப்பிரிவு

கேரளா போல தமிழகத்திலும் காய்கறிகளுக்கு அடிப்படை விலை நிர்ணயிக்கும் சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

புதிய வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட பிறகு அத்தியாவசியப் பொருட்கள் பெருமளவில் பதுக்கப்பட்டுள்ளன. இதனால், பருப்பு விலை ரூ.25 முதல் ரூ.60வரை உயர்ந்தது. சமையல் எண்ணெய் விலை உயர்ந்துகொண்டே செல்கிறது. வெங்காயம் கிலோ ரூ.100 முதல் ரூ.160 வரை உயர்ந்து ஏழை, நடுத்தர மக்களை கண்ணீர் சிந்த வைத்தது.

விவசாயிகளிடம் அடிமாட்டு விலைக்கு வாங்கி பதுக்கி வைத்துக் கொண்டு, தீபாவளி பண்டிகைநேரத்தில் இடைத்தரகர்களால் விலை ஏற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டத்தில், எவ்வளவு வேண்டுமானாலும் அத்தியாவசியப் பொருட்களை இருப்பு வைத்துக் கொள்ளலாம் என்று அளிக்கப்பட்டுள்ள சுதந்திரமே இந்த விலை உயர்வுக்கு காரணம்.

திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட உழவர் சந்தைகளை அதிமுகஅரசு செயலிழக்க வைத்து மூடவைத்துவிட்டது. உழவர் சந்தையை ஒழித்துவிட்டு, விவசாயிகளை பாதிக்கும் 3 வேளாண் சட்டங்களுக்கும் முதல்வர் பழனிசாமி ஆதரவளித்தார். ஆனால், இப்போது விவசாயி வேடம் தரித்து விவசாயிகளின் உணர்வுகளை கொச்சைப்படுத்துகிறார்.

குறைந்தபட்ச ஆதார விலைக்கு குறைவாக கொள்முதல் செய்யும் நிறுவனங்குக்கு சிறை தண்டனை அளிக்கும் சட்டத்தை பஞ்சாப் மாநில அரசு நிறைவேற்றியுள்ளது. இந்தியாவிலேயே முதல்முறையாக கேரள அரசு காய்கறிகளுக்கு அடிப்படை விலை நிர்ணயிக்கும் சட்டத்தை கொண்டு வந்துள்ளது.

தீபாவளி பண்டிகை நேரத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தை தடுக்க மத்திய,மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.வரம்பின்றி இருப்பு வைத்துக்கொள்ள அனுமதிக்கும் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டத்தின் செயலாக்கத்தை நிறுத்திவைக்க வேண்டும். கேரளாபோல காய்கறிகளுக்கு அடிப்படைவிலை நிர்ணயம் செய்யும் சட்டத்தை தமிழகத்திலும் கொண்டுவர வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்