தமிழகத்தில் அமைதியின்மையை ஏற்படுத்த முயற்சிக்கும் வகையில் பாஜக நடத்தும் வேல் யாத்திரைக்கு போட்டியாக காங்கிரஸ் சார்பில் ஏர் கலப்பை ஊர்வலம் நடத்தப்படும். இதன் நிறைவாக நடைபெறும் விவசாயிகளின் பேரணியில் ராகுல் காந்தி பங்கேற்கிறார் என்று அக்கட்சியின் தமிழகத் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நீண்ட நெடுங்காலமாக நிலவி வரும் மதநல்லிணக்கத்தை சீர்குலைக்க பாஜக முயற்சித்து வருகிறது. கந்தசஷ்டி கவசம், மனுஸ்மிருதி குறித்து சொல்லப்படாத கருத்துக்களை சொல்லியதாக திரித்து ஆதாரமற்ற அவதூறு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. மக்கள்பிரச்சினைகள் பற்றி கவலைப்படாமல் வேல் யாத்திரை மூலம் மக்களைப் பிளவுபடுத்த பாஜக திட்டமிடுகிறது. தமிழகத்தில் அமைதியின்மையை ஏற்படுத்த முயற்சிக்கிறது. ஜனநாயகம், மதச்சார்பின்மையில் நம்பிக்கை கொண்ட சக்திகள் இதை முறியடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண்சட்டங்களால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் சார்பில் ஏர் கலப்பை ஊர்வலத்தை நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 150 இடங்களில் இருந்துடிராக்டரில் ஏர் கலப்பை பொருத்தப்பட்டு ஊர்வலம் நடைபெறும். இதன்மூலம் வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பு, விவசாயக் கடன்களை ரத்து செய்ய மறுப்பு என்று மத்திய பாஜக அரசின் விவசாய விரோத நடவடிக்கைகளை மக்களிடம் எடுத்துச் சொல்வோம்.
இந்த ஏர் கலப்பை ஊர்வலத்தில் தமிழக காங்கிரஸ் முன்னணித் தலைவர்கள், மாநில நிர்வாகிகள், தலைமை நிலைய பேச்சாளர்கள் பங்கேற்பார்கள். இதன் இறுதியில் நடைபெறும் விவசாயிகளின் பேரணியில் ராகுல் காந்தி பங்கேற்கிறார். அவர் பங்கேற்கும் விவசாயிகள் பேரணி தமிழகத்தின் அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். ஊர்வலம் தொடங்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago