திருப்பூரில் அம்மன் கோயில் நிலத்தை காவல் துறைக்கு அளித்துஉள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நிலத்தை கோயிலுக்கே திரும்ப அளிக்கக் கோரியும் 2000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பூர் ஆண்டிபாளையம் பகுதியில் 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த மாரியம்மன் கோயில் உள்ளது. மன்னர் ஆட்சிக் காலத்தின்போது சுமார் 11 ஏக்கர் நிலம் கோயிலுக்கு வழங்கப்பட்டது. இக்கோயில் தற்போது இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
திருப்பூர் மாநகர காவல் துறையின் எதிர்காலத் தேவையை கருத்தில்கொண்டு, சொந்தமாக தனி அலுவலகக் கட்டிடம், ஆயுதப்படை வளாகம், காவல்துறை குடியிருப்புகள் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக ஆண்டிபாளையம் மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் இருந்து 8 ஏக்கர்நிலத்தை, இந்து சமய அறநிலையத் துறையிடமிருந்து முறைப்படி காவல்துறை விலைக்கு வாங்கிஉள்ளதாக கூறப்படுகிறது.
இதையறிந்த பொதுமக்கள், கோயில் நிலத்தை கோயிலுக்கே வழங்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்து அமைப்புகளும் இதே கோரிக்கையை வலியுறுத்தின.
இந்நிலையில் ஆண்டிபாளையம் உட்பட 7 ஊர்களைச் சேர்ந்த2000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள்நேற்று காலை திருப்பூர் - மங்கலம் சாலையில் பெரியாண்டிபாளையம் பிரிவு அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற மாநகர மத்திய காவல்நிலைய போலீஸார், பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, மறியலை கைவிட்ட பொதுமக்கள், அதேபகுதியில் சாலையோரம் அமர்ந்து கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்ரமணியம், திருப்பூர் பாஜக வடக்கு மாவட்டத் தலைவர் செந்தில்வேல், தமாகாமாவட்டத் தலைவர் ரவிக்குமார், காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஈஸ்வரன் மற்றும் பிற அமைப்புகளின் நிர்வாகிகள் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும், பொதுமக்களுடன் போராட்டத்தில் பங்கேற்றனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, ‘‘கோயில் நிலத்தை விற்பது தொடர்பாக ஊர் மக்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. சுமார்11 ஏக்கர் நிலத்தில் 8 ஏக்கர் வரைரூ.3.5 கோடிக்கு காவல் துறைக்கு விற்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. கோயில் நிலத்தை திரும்ப கோயிலுக்கே வழங்கும் வரை எங்களது போராட்டம் தொடரும்’’ என்றனர்.
கடைகள் அடைப்பு
போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன.
காலை முதல் பிற்பகல் வரை போராட்டம் தொடர்ந்த நிலையில், திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெகநாதன், மாநகர காவல் ஆணையர் க.கார்த்திகேயன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல், மாநகர காவல் துணை ஆணையர்கள் சுரேஷ்குமார், சுந்தரவடிவேல் உள்ளிட்டோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இப்பிரச்சினைக்கு சட்டரீதியாக தீர்வு காண முயற்சிக்க வேண்டும் எனவும், போராட்டத்தில் ஈடுபடக்கூடாது எனவும் அதிகாரிகள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. மேலும் பொதுமக்களின் கோரிக்கை குறித்து, மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகவும் அதிகாரிகள் தெரிவித்ததால், மாலையில் கவன ஈர்ப்புபோராட்டம் முடிவுக்கு வந்தது.
இதுகுறித்து இந்து முன்னணி அமைப்பின் மாநிலச் செயலாளர் ஜே.கிஷோர்குமார் ‘இந்து தமிழ்திசை’ நாளிதழிடம் கூறும்போது, ‘‘இவ்விவகாரம் தொடர்பாக நவ.4-ம் தேதி (நாளை) மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட பொதுமக்கள் சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு பிறகு நீதிமன்றத்தை நாடவும் முடிவு செய்துள்ளோம். அடுத்த மாதம் கோயில் திருவிழா நடைபெறவுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட நிலத்தில் விழா நடைபெற அனுமதிக்க வேண்டும் எனவும் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தோம்.
மேலிடத்தில் ஆலோசித்து முடிவு சொல்வதாக காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். இப்பிரச்சினையில் அதிகாரிகளின் நடவடிக்கையை பொறுத்து அடுத்தகட்ட போராட்டம் குறித்து அறிவிக்கப்படும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago