பொய் வேஷம் போடாமல் உண்மையாக உழைத்திருந்தால் தமிழகத்தில் இந்த அளவுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்காது என்றும் இதற்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்தான் காரணம் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
புதுக்கோட்டை வடக்கு ராஜ வீதியில் உள்ள திமுக மாவட்ட அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவச் சிலையை சென்னையில் இருந்தவாறு காணொலியில் நேற்று திறந்துவைத்து, தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
சர்க்கரை, புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே கரோனா நோயில் இருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியதை நம்பியதால்தான் தமிழகத்தில் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். கரோனாவால் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
பயத்தில் இருந்த மக்களுக்கு படம் காட்டுவதை மட்டுமே அமைச்சர் சி.விஜயபாஸ்கர் செய்து வந்தாரே தவிர, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதையுமே செய்யவில்லை. பொய் வேஷம் போடாமல் உண்மையாக உழைத்திருந்தால் இந்த அளவுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்காது.
குட்கா வழக்கு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணம் பட்டுவாடா செய்தது, வருமான வரித்துறை சோதனை போன்ற வழக்குகளெல்லாம் நிலுவையில் இருப்பதால்தான் பாஜக சொல்வதையெல்லாம் அதிமுக செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் எல்லாத் துறையிலும் ஊழல் மலிந்துள்ளது,
2015-ல் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திட்டம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. அதற்காக அமைக்கப்பட்ட நிர்வாகக் குழுவிலும் சர்ச்சைக்குள்ளான ஒருவரை உறுப்பினராக நியமித்துள்ளனர். திமுக ஆட்சியில் செய்த மலையளவு சாதனைகளுக்கு நிகராக அதிமுக ஆட்சியில் மலையளவு வேதனைகளே உள்ளன என்றார்.
இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.ரகுபதி, பெரியண்ணன் அரசு, சிவ.வீ.மெய்யநாதன், கட்சியின் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் கே.கே.செல்லபாண்டியன், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் கவிதைப்பித்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago