ஆட்சி மாற்றத்துக்கானது மட்டுமல்ல சட்டப்பேரவைத் தேர்தலை போர் எனக் கருதி செயல்பட வேண்டும் காணொலி மூலம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல், ஆட்சி மாற்றத்துக்கானது என்பது மட்டுமல்லாது, போர் எனக் கருதி செயல்பட வேண்டும் என திமுகவினரிடம் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், ‘தமிழகம் மீட்போம்’ என்ற தலைப்பில், காணொலி மூலம் தொடர் பொதுக்கூட்டங்களை திமுக நடத்துகிறது. ஈரோட்டில் நேற்று நடந்த முதல் கூட்டத்தில் காணொலி மூலமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

தமிழகத்தில் ஒரு கட்சியின் ஆட்சி நடக்கவில்லை. ஒரு கூட்டத்தின் ஆட்சி நடக்கிறது. கடந்த 4 ஆண்டுகளாக யார் தலைவர் என முட்டல், மோதல் நடந்து வருகிறது. முதல்வருக்கு அமைச்சர்கள் கட்டுப்பட்டு நடப்பதில்லை. உடைந்த கண்ணாடித் துண்டை ஒட்டியதுபோல், அதிமுக கட்சியும், ஆட்சியும்உள்ளது. இந்த ஆட்சியை மத்திய பாஜக அரசைத் தவிர வேறு யாரும் பாராட்ட மாட்டார்கள்.

தமிழகத்தில் இயற்கை பேரிடரின்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளையும் வழங்கவில்லை. தமிழகத்தில் எந்த பிரச்சினைக்கும் இந்த அரசு தீர்வு அளிக்கவில்லை.

முதலீடுகளை ஈர்த்ததாக, வேலைவாய்ப்பை அதிகரித்ததாக அரசு பொய் சொல்கிறது. விலை கொடுத்து விருதுகளை வாங்கிக் கொள்கின்றனர். எளிதாக தொழில் தொடங்கும் வாய்ப்புள்ள மாநிலங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்துக்கு 14-வது இடம் கிடைத்துள்ளது.

தமிழகத்தின் உரிமைகளை மத்திய அரசு பறித்து வருகிறது. ஜிஎஸ்டியில் நமக்கு வர வேண்டிய நிதியைகூட கேட்கவில்லை. மத்திய அரசைப் பார்த்து தமிழக அரசு அஞ்சுகிறது. எனவே, வரும் சட்டப்பேரவைத் தேர்தல் ஆட்சி மாற்றத்துக்கானது என்பது மட்டுமல்லாது, போர் எனக் கருதி செயல்பட வேண்டும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

திமுக மாநில துணைப் பொதுச்செயலாளர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ், மாவட்ட செயலாளர்கள் முத்துசாமி, நல்லசிவம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்