மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளிமாணவர்களுக்கு 7.5 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பது தமிழக மக்களுக்கு கிடைத்துள்ள வெற்றி என்று அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறியிருப்பதாவது:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளிமாணவர்களுக்கு 7.5 சதவீத முன்னுரிமை இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு 45 நாட்கள் கழித்து, கலந்தாய்வு நடத்துவதற்கான காலம் நெருங்கி வரும் நேரத்தில், வேறு வழியின்றி ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுக நடத்திய போராட்டமும், ஆளுநருக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் உளப்பூர்வமாக முன்வைத்த வேண்டுகோளும், ஆளுநரின் மனமாற்றத்துக்கு காரணமாக அமைந்தது. காரணம் எதுவானாலும், இறுதியில் வென்றது சமூகநீதி. எப்போதும் வெல்லும் சமூகநீதி.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி: இந்த மசோதாவுக்கு 45 நாள் தாமதத்துக்கு பிறகு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். தமிழகத்தில் அனைத்து தரப்பிலும் எழுந்த கடும் எதிர்ப்புகளால் வேறு வழியின்றி ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இது மக்கள் சக்திக்கு கிடைத்த வெற்றி.
பாமக நிறுவனர் ராமதாஸ்: நீண்ட தாமதத்துக்கு பிறகு இந்த சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். தாமதம் ஆனாலும் 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி. இந்த இடஒதுக்கீட்டுக்காக முதன்முதலில் குரல் கொடுத்த கட்சி என்ற வகையில் பாமக மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது, பெருமிதம் கொள்கிறது. ஆளுநர் ஒப்புதல் கிடைத்துவிட்டதால் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையை உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் 45 நாட்கள் அவகாசம் எடுத்துக்கொண்டது தேவையற்றது. எதிர்க்கட்சிகளின் போராட்டம், தமிழக அரசின் அரசாணை ஆகியவற்றால் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இது தமிழக மக்களுக்கும், சமூகநீதிக்கும் கிடைத்த வெற்றி.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்: மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு நேற்று பிறப்பித்தது. இந்நிலையில், 7.5 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளது வரவேற்கத்தக்கது. இதன்மூலம் தமிழகத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த ஆண்டே மருத்துவப் படிப்பில் சேர இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பது தமிழகமக்களின் ஒன்றுபட்ட போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. முன்கூட்டியே இந்த ஒப்புதலை அளித்திருந்தால் மாணவர்களின் மன உளைச்சலை தடுத்திருக்கலாம். வருங்காலத்திலாவது, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களின் அதிகாரத்தில் ஆளுநர்கள் தலையிடாமல் இருக்க வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பது தமிழக மக்களுக்கு, சமூகநீதிக்கு கிடைத்த வெற்றி. முன்கூட்டியே இந்த ஒப்புதல் கிடைத்திருந்தால் மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்ட ஒட்டுமொத்தசமூகத்திலும் தேவையற்ற பதற்றத்தை தவிர்த்திருக்கலாம். இந்ததாமதத்தை நியாயப்படுத்த ‘சட்டஆலோசனை’ என்ற நடைமுறை பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை மக்கள் எளிதாக புரிந்து கொள்வார்கள்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: சட்ட மசோதாவுக்கு ஆளுநர்ஒப்புதல் அளித்துள்ளது வரவேற்கத்தக்கது. இந்த மசோதாவை கொண்டுவந்த அதிமுக அரசுக்கும், ஒப்புதல் அளித்த ஆளுநருக்கும் தமாகா சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன்: அரசுப் பள்ளிகளில் பயிலும் கிராமப்புற ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்களின் மருத்துவராகும் கனவை நிறைவேற்றும் வகையில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அளிப்பதற்கான அரசாணை பிறப்பித்துள்ள முதல்வர் பழனிசாமியை மனமார பாராட்டுகிறேன். இந்நிலையில் 7.5 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளது தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago