பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக ‘எனது தோழி’ என்றபுதிய திட்டம் தெற்கு ரயில்வேயில் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம், பெண் பயணிகளுக்கு பயணம் முழுவதும் பாதுகாப்பு வழங்கப்படும்.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ரயிலில் பயணிக்கும் பெண் பயணிகளுக்கு, புறப்படும் ரயில் நிலையத்தில் இருந்து, சென்றடையும் ரயில் நிலையம் வரை பாதுகாப்பு அளிக்கும் நோக்கில், ‘எனது தோழி’ (மேரி சஹேலி) என்ற திட்டம் இந்திய ரயில்வேயில் தொடங்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக தென் கிழக்கு ரயில்வேயில் கடந்த செப்டம்பர் மாதம் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
இதற்கு பெண் பயணிகளிடம் வரவேற்பு கிடைத்ததால், அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி ரயில் பயணம் செய்யும்பெண் பயணிகள், குறிப்பாகதனியாக பயணம் செய்பவர்களிடம், ரயில்வே பாதுகாப்பு படை பெண் போலீஸார் தொடர்பு கொண்டு பயணத்தின்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பயணத்தின்போது ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் ‘182’ என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவுறுத்துவார்கள்.
மேலும், ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் (ஆர்பிஎஃப்), பெண் பயணிகளின் இருக்கை எண், ரயில் பெட்டி எண் ஆகியவற்றை சேகரித்து, ரயில் நிற்கும் இடங்களில் பாதுகாப்பு பணியில் உள்ள ஆர்பிஎஃப் போலீஸாருக்கு தெரிவிப்பார்கள். அவர்கள், சம்பந்தப்பட்ட பெண்பயணிகளைக் கண்காணிப்பார்கள். தேவைப்பட்டால், பெண்பயணிகளைத் தொடர்பு கொண்டு பேசுவார்கள்.
ரயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் மாநில ரயில்வே போலீஸாரும், தனியாகபயணம் செய்யும் பெண் பயணிகளுக்கான பாதுகாப்பை வழங்குவார்கள். சேர வேண்டிய இடம் வந்ததும், பெண் பயணிகளிடம் பாதுகாப்பு பற்றி கருத்துகளை ஆர்பிஎஃப் குழுவினர் சேகரிப்பார்கள். இந்தக் கருத்துகள் பரிசீலிக்கப்பட்டு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago