நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணியின்போது கட்டிடம் இடிந்து விழுந்தது தொழிலாளர்கள் உயிர் தப்பினர்

By செய்திப்பிரிவு

நாமக்கல்லில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டிடத்தின் போர்டிகோ திடீரென இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக தொழிலாளர்கள் தப்பினர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறம் 25 ஏக்கர் பரப்பளவில் ரூ.336 கோடி மதிப்பீட்டில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைனைக்கான கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த மார்ச் 5-ம் தேதி நடைபெற்றது. முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் கட்டுமானப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் மருத்துவமனை கட்டிடத்தின் முன்பகுதி (போர்டிகோ) கான்கிரீட் தளம் நேற்று காலை 6 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக தொழிலாளர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை.

சம்பவ இடத்தை மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் நேரில் பார்வையிட்டார்.

கட்டிடம் இடிந்த பகுதியை, அமைச்சர் பி.தங்கமணி நேரில் பார்வையிட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காலை நேரத்தில் கட்டிடத்தின் முன்பகுதி சரிந்தது. விபத்துக்கள் ஏதும் ஏற்படவில்லை. வெல்டிங் விட்டுபோன காரணத்தினால் பொறியாளர்களே முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக இடித்து விட்டனர். யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. தற்போது அதனை சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை செயல்பாட்டுக்கு வரும்.

நாமக்கல் மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் அரசு கட்டிடங்கள் தரமானதாக இல்லை என நாமக்கல் எம்பி சின்ராஜ் குற்றச்சாட்டு எழுப்பி வருகிறார். எம்பி பணி மக்களுக்கு சேவை செய்வதற்காக தான். கட்டிடங்களை தரம் பார்ப்பது அதிகாரிகளின் பணி. அதற்காக தான் அரசு அதிகாரிகளுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. அரசியல் விளம்பரத்துக்காக இதுபோன்ற செயல்களில் எம்பி ஈடுபட்டு வருகிறார் என்று அமைச்சர் கூறினார்.

கமல் ட்விட்டர் பதிவு

இதுகுறித்து, மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று வெளியிட்ட தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

நாமக்கல் மருத்துவக் கல்லூரி கட்டும் போதே இடிந்து விழுந்திருக்கிறது. சட்டப்பேரவைத் தேர்தலுக்குள் கட்டி முடித்து அரசியல் ஆதாயம் தேடும் அவசரக் கோலமே இந்த அலங்கோலத்துக்குக் காரணம். உயிர் காக்கும் மருத்துவமனை உருவாகும் போதே உடைந்து போயிருக்கிறது. நினைவிருக்கட்டும் நீங்களும் இப்படித்தான் விரைவில் உதிர்ந்து போவீர்கள். நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்யாதிருங்களய்யா. மக்கள் நீதி மலர தக்க தருணம் இதுவே என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்