தொழிலதிபர் மகனை கடத்திய 4 பேர் கைது

திருச்சி கன்டோன்மென்ட் வார்னர்ஸ் சாலையில் வசிப்பவர் தொழிலதிபர் கண்ணப்பன். கடந்த அக்.28-ம் தேதி வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த இவரது 12 வயது மகனை மர்ம நபர்கள் சிலர் காரில் கடத்திச் சென்றனர். பின்னர் அந்த கும்பல் கண்ணப்பனைத் தொடர்பு கொண்டு, சிறுவனை விடுவிக்க வேண்டுமெனில் ரூ.6 கோடி கொடுக்க வேண்டும் என பணம் கேட்டு மிரட்டியது.

இதனால் அதிர்ச்சியடைந்த கண்ணப்பன், உடனே மாநகர போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, சாலைகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் மற்றும் மர்ம நபர்களுடன் கண்ணப்பன் நடத்திய தொடர்ச்சியான செல்போன் உரையாடல்கள் மூலம் மர்ம நபர்கள் ராமலிங்க நகர் பகுதியில் இருப்பது கண்டறியப்பட்டது.

அவர்களைப் பிடிக்கச் சென்றபோது, போலீஸார் வருவதையறிந்த மர்ம நபர்கள் சிறுவனுடன் காரை விட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீஸார், கார் பதிவெண்ணைக் கொண்டு அதன் உரிமையாளர் குறித்து விசாரணை நடத்தினர்.

அதில், கன்டோன்மென்ட் வார்னர்ஸ் சாலையில் கார் பட்டறை வைத்திருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மாணிக்க பாண்டியன்(45), அவரது சகோதரர் சரவணன்(42), பாண்டமங்கலம் காவல்காரத் தெருவைச் சேர்ந்த செல்வகுமார்(26), சதீஷ்பாபு(29) ஆகியோர் பணத்துக்காக சிறுவனை கடத்திச் சென்றது உறுதியானது.

இதையடுத்து, 4 பேரையும் போலீஸார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்